ADDED : அக் 03, 2026 04:53 AM

பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார்
ஒன்றியம் தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி உள்ளிட்ட, 10க்கும்
மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் தவித்து
வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த தாளநத்தம்,
கேத்துரெட்டிப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளில் அய்யம்பட்டி, காவேரி
புரம், நொச்சி குட்டை, வேப்பிலை பட்டி உள்ளிட்ட, 10 க்கும் மேற்பட்ட
கிராமங்கள் உள்ளன. இதில்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து
வருகின்றனர்.
இங்குள்ள கர்ப்பிணி பெண்கள், தங்களுக்கான மருத்துவ
சிகிச்சை பெற பொம்மிடி, இராமியம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார
நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும். இக்கிராம பகுதியில் இருந்து, 13
கி.மீ.,துாரத்தில் இருக்கும் இந்த மருத்துவமனைகளுக்கு செல்ல
போக்குவரத்து வசதி இல்லை. பைக், கார், மூலம் தான் செல்ல வேண்டும்.
தினமும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல நோய்களுக்கும், நாய்,
பாம்பு கடிகளுக்கும், இந்த மருத்துவ மனைகளுக்கு தான் செல்ல வேண்டும்.
மேல் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல
நேரிடும் போது புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் பகல் இரவு
நேரங்களில் கேட் அடிக்கடி மூடப்படுவதால், 15 கி.மீ., துாரத்துக்கு
மேலாக சுற்றி தான் செல்ல வேண்டும்.
அதற்குள் நோயாளியின் உயிர்
போய்விடும் சூழல் உள்ளது. இதனால் பலமுறை இந்த கிராமங்களில் சிறப்பு
மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும், தாளநத்தம் பகுதியில் அரசு ஆரம்ப
சுகாதார நிலையம் அல்லது துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த,
20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து
வருகின்றனர்.
ஆனால், மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் நேரில்
சென்று ஆய்வு செய்யாமல் இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிராகரித்து
வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் மருத்துவ வசதியின்றி
அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் வேண்டுகோளுக்காக துணை சுகாதார
நிலையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
