/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு எப்போது?
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு எப்போது?
ADDED : நவ 28, 2024 12:58 AM
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு எப்போது?
அரூர், நவ. 28-
அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர், கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதியில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். தற்போது நெல் அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.
மேலும், டிச., ஜன., மற்றும் பிப்., மாதங்களில் நெல் அறுவடை தீவிரமாகும். இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தற்போது, விவசாயிகளிடமிருந்து, இடைத்தரகர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட, குறைந்த விலைக்கு நெல்லை வாங்குகின்றனர். இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் செய்ய அரூரில், அரசு சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, கடந்த, 2021 ஜன., 20ல், வேளாண் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக
அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பிப்ரவரி இறுதியில், நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படவில்லை.
சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து துவங்க
வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.