ADDED : ஆக 28, 2024 07:30 AM
தொப்பூர்: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 30; இவர், அங்கிருந்து லாரியில், கோவைக்கு கெமிக்கல் பவுடர் லோடு ஏற்றி வந்தார். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை, நேற்று மதியம், 1:00 மணிக்கு வந்தார். தொப்பூர் கணவாய் அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி, சேலத்திலிருந்து தர்மபுரி நோக்கி, எதிரே வந்த பலினோ மற்றும் ஸ்கோடா என, 2 கார்கள் மீது, அடுத்தடுத்து மோதி, சாலையோர மரத்தில் மோதி நின்றது.
தொப்பூர் போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், பலினோ காரில் வந்த, சேலம் மாவட்டம், கொங்குபட்டியை சேர்ந்த செல்வலீலா, 40, என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அவருடைய கணவர் சரவணன், 44, தந்தை துரைராஜ், 56, மற்றும் ஸ்கோடா காரில் வந்த நபர் உட்பட, 3 பேர் படுகாயம் அடைந்தனர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.