/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாடக மேடையில் நடமாடும் ரேஷன் கடை: திருமயகவுண்டன்பட்டியில் நீடிக்கும் அவலம்
/
நாடக மேடையில் நடமாடும் ரேஷன் கடை: திருமயகவுண்டன்பட்டியில் நீடிக்கும் அவலம்
நாடக மேடையில் நடமாடும் ரேஷன் கடை: திருமயகவுண்டன்பட்டியில் நீடிக்கும் அவலம்
நாடக மேடையில் நடமாடும் ரேஷன் கடை: திருமயகவுண்டன்பட்டியில் நீடிக்கும் அவலம்
ADDED : செப் 04, 2024 06:50 AM

சின்னாளபட்டி : திருமயகவுண்டன்பட்டியில் நிரந்தர ரேஷன் கடை கட்டடம் இல்லாமல் திறந்த வெளியில் பொருட்கள் வினியோகம் நடக்கிறது. பாதுகாப்பற்ற சூழலில் பயனாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
பச்சைமலையான்கோட்டை ரேஷன் கடை மூலம் சுற்றுப்பகுதி மக்களுக்கான ரேஷன் பொருட்கள் நடமாடும் ரேஷன் கடையாக திருமயகவுண்டன்பட்டி நாடக மேடையில் வைத்து வினியோகம் நடக்கிறது. இதே பகுதியில்தான் விவசாயிகளின் விளைபொருட்கள் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். இதனால் ரேஷன் பொருள் வழங்கலில் அவ்வப்போது குளறுபடி, பிரச்னைகள் ஏற்படுகிறது.
திறந்த வெளியில் பொருட்கள் வைத்திருக்கும் சூழலில் கால்நடைகள், நாய் போன்றவற்றின் தொல்லை நீடிக்கிறது. இவை ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பயனாளிகளையும் தாக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. சாரல் மழை நேரங்களில் வழங்கல் பணி பாதிக்கிறது.
இப்பகுதியில் பாதுகாப்பான சூழலில் ரேஷன் பொருள் வழக்கும் வகையில் நிரந்தர ரேஷன் கட்டடம் ஏற்படுத்த வேண்டும என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
அலைக்கழிப்பு
ஹரிகிருஷ்ணன் ,விவசாயி, திருமயகவுண்டன்பட்டி :பச்சைமலையான்கோட்டை ரேஷன் கடையின் கிளை அலுவலகமாக திருமயகவுண்டன்பட்டி நாடக மேடையை பயன்படுத்தி வருகின்றனர். தற்காலிக கடையாக செயல்படுவதால் பொருட்களை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் மட்டுமே இங்கு பொருட்கள் வினியோகம் நடக்கிறது. விவசாயம், பிற வேலைகளுக்கு செல்வோர் சம்பந்தப்பட்ட நாளில் மட்டுமே பொருட்கள் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 3 கி.மீ., சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்ற அலைக்கழிப்பும் நீடிக்கிறது.
காத்திருக்கும் அவலம்
யுவராஜ் ,கூலித்தொழிலாளி, கேத்தையகவுண்டன்பட்டி :கிராமத்தை சுற்றி உள்ள பிற இடங்களில் மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இப்பகுதியினர் நடமாடும் ரேஷன் கடையின் வினியோக நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை, பருப்பு பாமாயில், கோதுமை போன்ற அனைத்தும் அதே நாளில் கிடைப்பதில்லை. திருமயகவுண்டன்பட்டியில் நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துவது மட்டுமே இப்பிரச்னைக்கு உரிய தீர்வாக அமையும்.
--நிரந்தர கடை அமைக்க நடவடிக்கை
கூட்டுறவு துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், '' பச்சைமலையான்கோட்டை ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. முறையாக பணம் செலுத்துவதில் ஏற்பட்ட குளறுபடி, தாமதம் காரணமாக தற்போது மைக்கேல்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையுடன் திருமயகவுண்டன்பட்டி கடையை இணைத்துள்ளோம். அங்கு இட வசதி கிடைக்கும் சூழலில் விரைவில் நிரந்தர கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.