டூ வீலர் விபத்தில் பலி
குஜிலியம்பாறை: லந்தக்கோட்டை முத்தக்காபட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் 59. இவரது மனைவி முருகாயி 48. இவர்கள் தங்களது இரு பேரன்களுடன் டூவீலரில் கொடும்பு குளம் அருகே சென்றபோது டிராக்டர் டிரைலர் ஒன்று இணைப்பு துண்டாகி நடுரோட்டில் குறுக்காக நின்றிருந்தது. இதில் டூவீலர் மோத சாமிநாதன் உட்பட நால்வரும் காயமடைந்தனர். இதில் சாமிநாதன் இறந்தார். டிராக்டர் டிரைவர் கரூர் மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மீது, குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
பெண்ணிடம் நகை பறிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் கூவனுாத்து கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி.இவரது மனைவி ரங்கம்மாள். இவர்கள் திண்டுக்கல் நத்தம் ரோடு பதனிகடை பிரிவு அருகே உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்கின்றனர். நேற்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூவர் தோட்டத்தில் கட்டி இருந்த மாடுகளை திருட முயன்றனர். இதைப்பார்த்த தம்பதியினர் இதை தடுத்தனர். அப்போது கொள்ளையர்கள் ரங்கம்மாளிடம் அரிவாளை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து தப்பினர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவன் இறப்பு; விசாரணை
வேடசந்துார்: வெள்ளனம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சபரி 14. தோட்டத்து வீட்டில் வசிக்கும் இவர் இரவு 11:00 மணிக்கு நாய் சத்தம் போட்டு கொண்டே இருந்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். சுற்றி பார்த்த போது யாரும் இல்லை. விவசாய பயிர்களுக்கான மருந்து அடித்த காலி பாட்டில் கீழே கிடந்துள்ளது. டப்பாவை எடுத்து முகர்ந்த போது ஒரு சொட்டு மருந்து அவரது உதட்டில் பட்டு வாய்க்குள் சென்று விட்டது. இதனை பெற்றோரிடம் சொல்லாத சபரி வீட்டுக்குள் சென்று படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுக்க திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சபரி இறந்தார். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.