ADDED : மே 28, 2024 05:11 AM
மூவருக்கு குண்டாஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆத்துார் ரெட்டியப்பட்டி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜபெருமாள்,திண்டுக்கல் நிலக்கோட்டை விருவீடு பகுதியை சேர்ந்தவர் பிச்சை முத்து, திண்டுக்கல் வேடசந்துார் கோவிலுார் பகுதியை சேர்ந்தவர் பாலுபாரதி. இவர்கள் மூவரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மூவர் மீதும் எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நகை பறிப்பு
வடமதுரை: வேல்வார்கோட்டை செட்டியபட்டியை சேர்ந்தவர் வள்ளியம்மாள்65. நேற்று காலை இவரது வீட்டு அருகே குறி சொல்லும் வேடத்தில் வந்த ஆண் ஒருவர்,வள்ளியம்மாள் தனியாக இருப்பதை தெரிந்து அவர் மீது மயக்க மருந்தை தெளித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றார்.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருட்டு: ஒருவர் கைது
கொடைக்கானல்: கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்தவர் ஜான்பீட்டர். சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியே சென்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 11 பவுன் நகையை திருடினர். கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து அம்மாபேட்டையைச் சேர்ந்த மணிபாலனை 25,கைது செய்து அவரிடமிருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
வடமதுரை: அய்யலுார் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் வடமதுரை எஸ்.ஐ.,க்கள் சித்திக், கிருஷ்ணவேணி ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த எலப்பார்பட்டி கிழக்குத் தெரு ராசுகுட்டியை28,விசாரித்ததில் விற்பனைக்காக 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ஒருவருக்கு வெட்டு
நெய்காரப்பட்டி: பழநி பாப்பம்பட்டியில் வசிக்கும் சந்தானத்துரை49. இவருக்கும் குதிரையாறு அணைப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் 28. இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் குதிரையாறு அணை பகுதிக்கு சென்ற சந்தானத்துரை, மணிகண்டனை அரிவாளால் வெட்டினார்.
மணிகண்டன் பழநி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பெண் பலி
வேடசந்துார்:தாடிக்கொம்பு உண்டார்பட்டி பள்ளபட்டியைச் சேர்ந்த நுாற்பாலை தொழிலாளி ஆறுமுகம் 40. இவரும், இவரது மனைவி செல்வியும் 35, நேற்று காலை வேலைக்கு செல்ல டூவீலரில் வந்தனர். லட்சுமணன்பட்டி நால்ரோடு அருகே ரோடை கடக்க முயன்ற போது கரூர் திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது.
இதில் செல்வி இறந்தார்.
வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் தனியார் பஸ் டிரைவர் சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த மதன்குமாரை 35,கைது செய்து விசாரிக்கிறார்.