ADDED : ஆக 19, 2024 01:10 AM
நிலப்பிரச்னை நால்வர் காயம்
வேடசந்துார்: வேடசந்துார் தாசிரிபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனியம்மாள் 42. நிலப்பிரச்னை காரணமாக இவரது தம்பி பால்ராஜ்,அவரது மனைவி,உறவினர் சேர்ந்து தாக்கியதாக கூறி வேடசந்துார் அரசு மருத்துவமனையில் முனியம்மாள் சிகிச்சை பெறுகிறார். வேடசந்துார் கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் மருதமுத்து 72,மனைவி காளியம்மாள் 70. நிலப்பிரச்சினை காரணமாக, அவர்களது மகன் தாக்கியதால் இருவரும் காயம் அடைந்த நிலையில் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் 65. இவரது வீட்டிற்கு பின்னால் இருக்கும் நத்தம் புறம்போக்கு நிலத்தை யார் அனுபவிப்பது குறித்து பிரச்னையில், அப்பகுதியை சேர்ந்த மூவர் சேர்ந்து தாக்கியதாக கூறி வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒருவர் மீது வழக்கு
நத்தம்: காந்திநகரை சேர்ந்தவர் நாகராஜ்35. இவர் அதே பகுதியில் தேங்காய் கோடவுன் நடத்துகிறார். ஆக.11 இரவு கோடவுனை அடைத்து வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் நாகராஜ்,வந்த போது அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது. நாகராஜ் நத்தம் போலீசில் புகாரளித்தார். நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
பள்ளி மாணவன் சாவு
நத்தம்: காசம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி40. இவரது மகன் அபிசேக் 15. கோயம்புத்துாரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தான். இவர் ஒரு மாதமாக தீராத வயிற்று வலி இருந்து அவதிப்பட்டார். இந்நிலையில் விடுமுறைக்காக காசம்பட்டிக்கு வந்த அபிசேக்கிற்கு நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகரித்து மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனில்லாமல் அபிசேக் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கிறார்.
விபத்தில் கல்லுாரி மாணவர் பலி
ஒட்டன்சத்திரம்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் அம்ருத் 24. அங்குள்ள கல்லுாரி ஒன்றில் பி.டெக். இறுதி ஆண்டு படித்தார். தன்னுடைய தம்பி அபி,நண்பர்களான வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோருடன் சொகுசு கார் ஒன்றில் கோவை ஈஷா யோகா மையம் சென்று விட்டு ராமேஸ்வரம் புறப்பட்டனர். பொள்ளாச்சி ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோட்டில் காவேரியம்மாபட்டி பிரிவு அருகே நேற்று மாலை 5:00 மணிக்கு வந்தபோது காரின் டயர் வெடித்து அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி அம்ருத் இறந்தார். மூவரும் காயமின்றி உயிர் தப்பினர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

