/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துக்கள்; அதிகாரிகள் அலட்சியத்தால் கன்னிவாடி- மூலச்சத்திரம் ரோட்டில் அவதி
/
நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துக்கள்; அதிகாரிகள் அலட்சியத்தால் கன்னிவாடி- மூலச்சத்திரம் ரோட்டில் அவதி
நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துக்கள்; அதிகாரிகள் அலட்சியத்தால் கன்னிவாடி- மூலச்சத்திரம் ரோட்டில் அவதி
நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துக்கள்; அதிகாரிகள் அலட்சியத்தால் கன்னிவாடி- மூலச்சத்திரம் ரோட்டில் அவதி
ADDED : செப் 17, 2025 03:24 AM

கன்னிவாடி : மெட்டூர்-மூலச்சத்திரம் இடையே முந்தைய ரோட்டின் நான்கு வழிச்சாலை பணியில் குளறுபடிகளால் விபத்துக்கள் வாடிக்கையாகிறது.
காமலாபுரம்-மூலச்சத்திரம் இடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. செம்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி தடத்திலான தற்போதைய ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
தற்போது வரை பழைய வழித்தடத்தில் அதிக அளவு வாகன போக்குவரத்து நீடிக்கிறது. இத்தடத்தையும் 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி 2 ஆண்டுகளாக நடந்தது. விரிவாக்க பணியில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை பணி நடந்தது. இதற்கான பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பல இடங்களில் மேடு பள்ளங்களுடன் நடந்துள்ளது. ஆண்டரசன்பட்டி அருகே சீரமைக்கப்பட்ட ரோடு மீண்டும் தோண்டப்பட்டு விரிவாக்கப் பணி நடந்தபோதும் மழைநீர் வெளியேற வழியின்றி ரோட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. குறுகிய திருப்பங்கள் உள்ள ரோட்டின் நடுவே டிவைடர் அமைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட விபத்துக்கள் தொடர்கிறது.சில இடங்களில் மழைநீர் செல்வதற்கான வடிகால் வசதி இல்லை. மழைநீர் மட்டுமின்றி நீர் வழித்தட குழாய் கசிவு நீரும் பெரும்பாலான இடங்களில் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது. இப்பிரச்னையால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. டூவீலர்களில் செல்வோர் நிலைதடுமாற உயிர் பலி அரங்கேறுகிறது. மாவட்ட நிர்வாகம் இத்தடத்தில் பயணிப்போரை அவதிக்குள்ளாக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும்.
குறுகிய வழித்தடம் வீரப்பன், கூலித்தொழிலாளி, கன்னிவாடி : குறுகிய திருப்பங்களில் வாகனங்களை எதிர்வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்கான குவி கண்ணாடிகள் பெயரளவில் அமைத்தனர். இவற்றில் பல சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை.
ஆண்டரசன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு தோண்டப்பட்டு விரிவாக்க பணி பல மாதங்களாக நடந்தபோதும் குளறுபடிகள் தொடர்கிறது.
புதிய 4 வழிச்சாலை இணைப்பு பகுதியில் வரும் அதிவேக வாகனங்கள், முந்தைய ரோட்டில் இணையும் இடத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 4 வழிச்சாலையில் வரும் வாகனங்களை கண்காணிக்க முடியாத நிலையில் குறுக்காக இப்பகுதியில் இணைப்பு அமைத்துள்ளனர். பாதசாரிகள், டூவீலர்களில் இரவு நேரங்களில் கடந்து செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.
தேங்கும் மழைநீர் பரமசிவம்,விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி, கன்னிவாடி : அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்யாமல் அரைகுறையாக அவசரகதியில் விரிவாக்க பணியை முடித்து விட்டனர். பல இடங்களில் ரோட்டில் மழைநீர் செல்ல வடிகால் இல்லை. எஸ்.பாறைப்பட்டி, தருமத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வாறுகாலில் மழைநீர் சேரும் பகுதியில் சிறிய அளவில் சல்லடை அமைத்துள்ளனர். அதிக தண்ணீர் சேகரமாகும் நேரங்களில் மண், கழிவுகள் மேவி ரோட்டோரத்தில் தண்ணீர் தேங்குகிறது. டூவீலர்களில் செல்வோர் பாதிப்படைகின்றனர். எஸ்.பாறைப்பட்டி, தருமத்துப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட இடங்களில் ரோடு முழுமையாக அளவீடு செய்யப்படவில்லை. அதிவேக பயணம், விபத்து அபாயத்தை போலீசாரும் கண்டுகொள்வதில்லை.