/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
--டி.பண்ணைப்பட்டியில் குடியிருப்புகளை சூழும் சாக்கடையால் தொற்று
/
--டி.பண்ணைப்பட்டியில் குடியிருப்புகளை சூழும் சாக்கடையால் தொற்று
--டி.பண்ணைப்பட்டியில் குடியிருப்புகளை சூழும் சாக்கடையால் தொற்று
--டி.பண்ணைப்பட்டியில் குடியிருப்புகளை சூழும் சாக்கடையால் தொற்று
ADDED : நவ 12, 2024 05:37 AM

ரெட்டியார்சத்திரம்: டி.பண்ணைப்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால் கண்ட இடங்களில் கழிவுகளை குவிந்துள்ளனர். வெளியேற வழி இல்லாத மழைநீர் சாக்கடையுடன் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் அவலநிலையில் பல கிராமங்கள் சிக்கி தவிக்கின்றன.
பழநிகவுண்டன்புதுார், தெத்துப்பட்டி, ஆண்டரசன்பட்டி, டி.பண்ணைப்பட்டி, கருப்பன்சேர்வைகாரன்பட்டி, கோம்பை, குட்டிக்கரடு, வேலன்சேர்வைகாரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டம் இப்பகுதியில் செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. கிராமங்கள்தோறும் கண்ட இடங்களில் கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன. சாக்கடை கழிவுகள் அள்ளப்படாத சூழலில் குப்பை மேவியுள்ளன.
கழிவுநீர் வெளியேற வழியின்றி மழைநீருடன் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் அவலம் பரவலாக உள்ளது. ஈ, வண்டுகள், பூச்சி, கொசுத்தொல்லை நோய் பாதிப்பு என சுகாதாரகேடான சுழலில் இப்பகுதியினர் சிக்கி தவிக்கின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகம், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் முறையிட்டு பல மாதங்களாகியும் தீர்வு கிடைக்கவில்லை. பெயரளவில் கூட சுகாதார வசதிகள் இல்லாத அவலநிலையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சுகாதாரமற்ற சூழல்
பிரம்மசாமி, பழனிக்கவுண்டன்புதூர்: சுகாதாரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் பெயரளவில் கூட இல்லை. உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகிறது.
காளியம்மன் கோயில் அருகே மேல்நிலை தண்ணீர் தொட்டி துாண்கள் சேதமடைந்த நிலையில் வால்வு பகுதியில் கசிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.
அடிப்பகுதி முழுவதுமாக பாசி படர்ந்த நிலையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மையில் குப்பை அகற்றும் பணியை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
சேதமடைந்த ரோடு
மகுடீஸ்வரன், பா.ஜ., நிர்வாகி, பண்ணைப்பட்டி: பகவதியம்மன் கோயில் அருகே மழைநீர் வெளியேற வடிகால் பராமரிப்பு அவசியம்.
இப்பணியில் அலட்சியத்தால் அசுத்த நீர் இப்பகுதியை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ளது. சாக்கடை துார்வாரபடாத சூழலில் கழிவு நீரும் கலந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது வேலன்சேர்வைகாரன்பட்டி ரோட்டில் கழிவு நீர் செல்ல வசதி இல்லை.
மேற்கு தெரு சாக்கடையை மேடான பகுதிக்கு திருப்பி அனுப்பும் வகையில் அமைத்துள்ளனர்.
இதனால் அசுத்தநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. 3வது வார்டு சேர்வைக்காரன்பட்டி செல்லும் வழியில் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுக்க நடைமுறை பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர்.
தொற்று அபாயம்
ஆறுமுகம், கூலித்தொழிலாளி பண்ணைப்பட்டி: கோம்பை ரோட்டில் பகவதி அம்மன் கோயில், பழனிகவுண்டன்புதுார் பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடைகள் அமைத்திருந்தனர். இதனை முழுமையாக அகற்றிய சூழலில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பள்ளி குழந்தைகள், முதியோர் பாதிப்படையும் நிலை தொடர்கிறது.
பண்ணைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளனர்.
குவிந்திருக்கும் குப்பை கழிவுகளால் தொற்று அபாயம் நீடிக்கிறது. பெரும்பாலும் ஊராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.---
துரித நடவடிக்கை
மலரவன் பி.டி.ஓ., ரெட்டியார்சத்திரம்: சுகாதார பிரச்னைகள் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் தேங்காத வகையில் வெளியேறுவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படும்.
பண்ணைப்பட்டி ஊராட்சி அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

