பஸ் மோதி காயம்
திண்டுக்கல்: அனுமந்திராயன்கோட்டையை சேர்ந்தவர் இந்துராணி50. எரியோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து அனுமந்திராயன்கோட்டை செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திருச்சி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இந்துராணிக்கு காலில் காயம் ஏற்பட்டது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மயில் பலி
திண்டுக்கல்: திருநெல்வேலி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல் வந்தது. இதன் இன்ஜினில் இறந்தநிலையில் பெண் மயில் ஒன்று சிக்கி இருந்தது. ரயில்வே போலீசார் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
டூவீலர் திருடியவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் டூவீலர்கள் திருட்டு தொடர்பாக மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா,எஸ்.ஐ.,மலைச்சாமி,எஸ்.எஸ்.ஐ.,வீரபாண்டியன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டது திண்டுக்கல் பூதிபுரத்தை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரியவர அவரை கைது செய்தனர். 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கியால் சுட்டவர் கைது
திண்டுக்கல்: சிறுமலை தாழக்கடையை சேர்ந்தவர் வெள்ளையன்25 ஆக.11ல் மாடுகளை தாழக்கடை பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சவேரியார்75, தோட்டத்திற்குள் மாடுகள் புகுந்தது. ஏற்கனவே வெள்ளையனுக்கும்,சவேரியாருக்கும் முன்விரோதம் இருந்தது. இதன் ஆத்திரத்தில் வெள்ளையனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன்,எஸ்.ஐ.,பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் சவேரியாரை கைது செய்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
வீட்டை உடைத்து திருட முயற்சி
வடமதுரை: வேல்வார்கோட்டை அருகே முத்தனங்கோட்டை குளத்துக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்தி 27. இவரது வீடு அருகே வேல்வார்கோட்டை நுாற்பாலையின் வடமாநில தொழிலாளர்கள் தங்கிருக்கும் விடுதி உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கார்த்தி வீட்டில் தனியாக தூங்கினார். நேற்று அதிகாலை வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து மில் தொழிலாளர் விடுதி சார்ந்த மூவர் உள்ளே புகுந்தனர். இவர்களுள் ஒருவரை பிடித்த அப்பகுதியினர் கயிற்றால் கட்டி வடமதுரை போலீசாருக்கு தகவல் தந்தனர். விசாரித்ததில் ஒடிசா மாநிலம் அஜய் 19 ,என்பது தெரிந்தது. அவரை மீட்டு திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்ற இருவர் குறித்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் மாணவர் பலி
திண்டுக்கல்: என்.எஸ்.நகரை சேர்ந்தவர் முருகவேலு35. இவரது மகன் அபினாஷ்16. திண்டுகல்லில் தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களோடு டூவீலரில் ராமையன்பட்டி பகுதியில் சென்றார். ரோட்டில் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி இறந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
வியாபாரி தற்கொலை
நிலக்கோட்டை: நிலக்கோட்டையை சேர்ந்த ஜவுளி வியாபாரி பாலகிருஷ்ணன் 56. இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். மதுவை விட முடியாமல் தவித்த பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து அருந்தினார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளி மாணவி தற்கொலை
வடமதுரை: சிங்காரக்கோட்டை குரும்பபட்டியை சேர்ந்த தங்கபாண்டி மகள் துர்கா தேவி 15. வடமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் இருந்து விழுந்து பலி
கொடைரோடு: பீஹாரைச் சேர்ந்தவர் ரமேஷ் மாஜி 32. குடும்பத்தினருடன் வாடிப்பட்டி அருகே உள்ள நகரி தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்தார். துாத்துக்குடி மைசூரு ரயிலில் படியில் பயணித்த போது தவறி விழுந்து பலியானார். கொடைரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
நெய்க்காரப்பட்டி: பழநி, நெய்க்காரப்பட்டி, சக்கரை கவுண்டன் குளம் பகுதியில் கஞ்சா விற்ற பெரியகலையம்புத்துாரை சேர்ந்த தண்டபாணி 70, சபரி 20, பிரகாஷ் 23, ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

