/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ்சில் தினமும் 2.70 லட்சம் பேர் இலவச பயணம்
/
அரசு பஸ்சில் தினமும் 2.70 லட்சம் பேர் இலவச பயணம்
ADDED : செப் 14, 2024 05:30 AM

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மண்டலத்தில் அரசு பஸ்சில் பெண்கள்,மாற்றுத்திறனாளிகள் உட்பட தினமும் 2.70 லட்சம் பேர் இலவச பயணம்'' செய்கின்றனர் என திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் சசிக்குமார் தெரிவித்தார்.
அரசு பஸ்கள் ரோட்டோரங்களில் அதிகளவில் பழுதாகி நிற்கிறதே...
திண்டுக்கல், தேனி சேர்த்து மண்டலத்தில் 798 அரசு பஸ்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 165 பஸ்கள் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பழுதான பஸ்களை கண்டறிந்து அதன் பிரச்னைகளை சரி செய்து வருகிறோம். பிரேக் டவுனாகும் பஸ்களை தேர்வு செய்து நிரந்தர தீர்வுக்கும் வழிவகை செய்கிறோம்.
டிரைவர்,கண்டக்டர்கள் பற்றாக்குறை உள்ளதா...
தேவைக்கேற்ப டிரைவர்,கண்டக்டர்கள் உள்ளனர். கூடுதலாக தேவைப்பட்டால் தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக டிரைவர்,கண்டக்டர்களை நியமிக்கிறோம். முறையாக அனைவரும் அவர்களுக்குரிய பணியை செய்கின்றனர்.
விழாக்காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறதா...
திண்டுக்கல், தேனி, வெளி மாவட்டங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் திண்டுக்கல்லிலிருந்து பக்தர்கள் செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு உதவும் வகையில் வழித்தடங்களில் போக்குவரத்து அதிகாரிகளும் நியமிக்கப்படுகின்றனர். தீபாவளி,பொங்கல் போன்ற நேரங்களிலும் பயணிகள் தேவைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பஸ் வசதின்றி பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிக்கிறார்களே...
பள்ளி,கல்லுாரி மாணவர்கள் மத்தியில் டிரைவர்,கண்டக்டர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். படிக்கட்டில் தொங்குபவர்களையும் உள்ளே வாருங்கள் எனக்கூறி இருக்கையில் அமர வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களுக்கு பஸ்கள் முறையாக வரவில்லை என்கின்றனரே...
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா வழித்தடங்களையும் சம்பந்தபட்ட அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் செல்கிறது. இரவு நேரங்களிலும் பயணிகளை பத்திரமாக அழைத்து சென்று பஸ் ஸ்டாண்ட்களில் இறக்கிவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய பஸ்களை என்ன செய்கிறீர்கள்...
ஓரளவிற்கு ஓடும் பஸ்களை பயன்படுத்துகிறோம். அறவே ஓடாத பஸ்களை ஏலம் விடுகிறோம். தற்போது பழைய, பழுதான பஸ்கள் இல்லை.
இலவசமாக பயணிப்பதை பெண்கள் விரும்புகிறார்களா...
திண்டுக்கல் மண்டலத்தில் பெண்களை இலவசமாக அழைத்து செல்வதற்காக 309 பஸ்கள் செயல்பாட்டில் உள்ளது. அதில் தினமும் பெண்கள்,மாற்றுத்திறனாளிகள் என 2.70 லட்சம் பேர் பயணிக்கின்றனர். அரசு சலுகைகளை மக்கள் பெற்று கொள்கின்றனர் என்றார்.