/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மனிதனை மனிதனாக மதிக்க அற்புத பயிற்சி: பிரிவில்லா உலகத்தை உருவாக்க புது முயற்சி
/
மனிதனை மனிதனாக மதிக்க அற்புத பயிற்சி: பிரிவில்லா உலகத்தை உருவாக்க புது முயற்சி
மனிதனை மனிதனாக மதிக்க அற்புத பயிற்சி: பிரிவில்லா உலகத்தை உருவாக்க புது முயற்சி
மனிதனை மனிதனாக மதிக்க அற்புத பயிற்சி: பிரிவில்லா உலகத்தை உருவாக்க புது முயற்சி
ADDED : ஆக 03, 2024 05:00 AM

திண்டுக்கல்
மண்ணில் ஒட்டிக்கொள்ளும் மழைநீரைப் போல் இன்னும் வாழ்ந்துகொண்டுருக்கிறது மனிதம்.அறிமுகமில்லாத மனிதர்கள் உதவும் போது என்ற வரிகளுக்கு ஏற்ப மனிதத்தின் மதிப்புகளை மாணவர்களிடத்தே கொண்டு போய் சேர்க்க ஒரு பயிற்சி பட்டறை நடந்திருக்கிறது. நம்மிடம் மனம் என்கின்ற சிந்திக்கின்ற, யூகித்து அறிகின்ற ஆறாவது அறிவு உள்ளது. இன்று சமுதாய நிகழ்வுகளை கேட்கும்போது, பார்க்கும் போது, பரவலாக, குறிப்பாக இளைஞர்கள் சிலர் மனித நேயத்தை மறந்து தற்காலிக திருப்திக்காக தவறான செயல்கள் செய்வதை அறிகிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் மனித மாண்புகள், மனிதனின் மதிப்புகள் குறித்து எவரும் சிந்திப்பதில்லை. இதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரி குழு உலகளாவிய மனித மதிப்புகள் எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை முன்னெடுத்துள்ளது. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், தீங்கில்லாத விடுபடாத மனிதம் கொண்ட உலகம் உருவாக வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கம்.திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் உலகளாவிய மனித மதிப்புகள் எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சியானது 8 நாட்கள் நடந்தது. பயிற்சி குறித்து பங்கேற்றவர்கள், ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் சில...
சக மனிதனை புரிந்து கொள்ள வேண்டும்
சூர்யா ரகுராம், அறங்காவலர், பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி : ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி என்பது மனிதனை மனிதன் புரிந்து கொள்ள, வாழ அடிப்படை தேவைகள் என்பது குறித்தது. மனிதர்கள் பல வித குணங்களை கொண்டிருப்பர். சக மனிதனை சக மனிதன் அணுக நல்ல உறவுடன் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியல் வருடாவருடம் முதலாண்டு பயில வரும் மாணவர்களுக்கு தனி பயிற்சி வகுப்பாகவே நடத்தி வருகிறோம். இதனை தற்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்லுாரி குழு முன்னெடுத்துள்ளது. படிக்கும்போதே மனித மாண்புகள் குறித்து தெரிந்து கொள்வது நல்ல சமூதாயத்தை உருவாக்கும். இந்த பயிற்சி வகுப்புகள் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதே நோக்கம்.
மனிதனின் மதிப்புகள் தெரிய வேண்டும்
வாசுதேவன், முதல்வர், பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி : இந்த பயிற்சி என்பது ஒரு சமூதாயக் கண்ணோட்டம் கொண்டது. 21ம் நுாற்றாண்டில் நம் கட்டுக்குள் இல்லாத நிறைய விஷயங்கள் உள்ளன. அணு ஆயுதங்கள் தொடங்கி அதிநவீன தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளன. தகவல் , உயிரி தொழில்நுட்பங்கள் என இணையும் போது மனிதனின் பழக்கத்தையே மாற்றக் கூடிய வகையில் உள்ளது. இவையெல்லாம் நாம் கட்டுப்படுத்த முடியாது. இதற்கெல்லாம் உலகளவில் மனிதனின் மதிப்புகள் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சக மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்வதும், துன்புறுத்தக் கூடாது என்ற புரிதலை வளர்த்துக் கொள்வதும் இன்றியமையாத ஒன்றாகி வருகிறது. கல்லுாரிகள் தொடங்கி சமூகம் வரை மனித மதிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சி பட்டறை தான் தற்போது நடந்து முடிந்துள்ள உலகளாவிய மனித மதிப்புகள் என்ற தலைப்பில் நடந்த ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி.
திறன் கல்வி மட்டும் போதாது
தீபேஸ், தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் : ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி உலகளாவிய மனித மதிப்புகள்என்ற தலைப்பில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்தது. 8 நாட்கள் இந்த கல்வி பயிற்சி பட்டறை நடந்துள்ளது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மனிதம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த கல்லுாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் திறன் கல்வி மட்டுமல்லாது இந்த சமூகத்தில் தற்போது விடுபட்டுள்ள மனித மதிப்புகள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கல்லுாரி பேராசியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேவை பிரிவில்லா மனிதம்
கீதா, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் : இந்த பயிற்சியில் அனைத்தையுமே உள்ளடக்குகிறோம். மனித மதிப்புகள் என்பது தனிநபரிலிருந்து குடும்பம், குடுப்பத்திலிருந்து நல்ல சமூகம் உருவாக வேண்டும். ஒரு பிரிவில்லா மனிதம் கொண்ட இந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கம்.
மனிதநேயத்தோடு கண்டுபிடிப்பு
கண்ணன், ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர், பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி : இன்றைய கல்வி முறையில் நிறைய கண்டுபிடிப்புகளாக அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள அதே வேளையில் மனிதநேயம் என்பது இல்லை என்ற நிலை இருக்கிறது. ஆனால் அது அவர்களுக்கே வினையாகிவிடுகிறது. இதனை தவிர்க்க மனிதநேயத்தோடு கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டுமென்பதே இந்த பயிற்சியின் நோக்கம். இதற்கான முன்னெடுப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரி குழு எடுத்துள்ளது. 2017 ல் இருந்து இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என இந்த மனித மதிப்புகள் குறித்த பயிற்சிகள் நடந்தது. 8 நாட்கள் பயிற்சி மூலம் இனி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே மனிதர்களும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாத வகையில் உருவாக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் நடந்தன.