ADDED : ஜூலை 26, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை அருகே எஸ்.குரும்பபட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில் இந்தாண்டும் மாணவர் சேர்க்கையின்றி மூடி கிடக்கிறது.
சிங்காரக்கோட்டை எஸ்.குரும்பபட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி போதிய மாணவர்கள் இல்லாமல் கடந்த 2012ல் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி சிறார்கள் சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், மொட்டணம்பட்டி, வடமதுரை என பல ஊர்களுக்கும் படிக்கச் சென்றனர். கிராமத்தினர் எடுத்த முயற்சியால் 2021ல் இங்கு மீண்டும் 10 மாணவர்களுடன் பள்ளி செயல்பட துவங்கியது. இதற்காக ரூ.5 லட்சம் செலவில் கட்டடம் மராமத்தும் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 கல்வி ஆண்டுகளில் மாணவர்கள் இங்கு சேரவில்லை. பள்ளியை மீண்டும் செயல்பட வைக்க எடுத்த முயற்சிகள் பலன் தராமல் இந்தாண்டும் பள்ளி மூடியே கிடக்கிறது.
