/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசியல் ரீதியாக பந்தாடப்படும் கொடைக்கானல் தாலுகா தனித்தீவாக தவிக்கும் அவலத்திற்கு தனித் தொகுதியே தீர்வு
/
அரசியல் ரீதியாக பந்தாடப்படும் கொடைக்கானல் தாலுகா தனித்தீவாக தவிக்கும் அவலத்திற்கு தனித் தொகுதியே தீர்வு
அரசியல் ரீதியாக பந்தாடப்படும் கொடைக்கானல் தாலுகா தனித்தீவாக தவிக்கும் அவலத்திற்கு தனித் தொகுதியே தீர்வு
அரசியல் ரீதியாக பந்தாடப்படும் கொடைக்கானல் தாலுகா தனித்தீவாக தவிக்கும் அவலத்திற்கு தனித் தொகுதியே தீர்வு
ADDED : மார் 13, 2025 05:30 AM
கொடைக்கானல்: அரசியல் ரீதியாக பந்தாடப்படும் கொடைக்கானல் தாலுகாவில் நிலையற்ற தன்மையால் வளர்ச்சி பணிகள் பாதிப்பை தவிர்க்க தனித் தொகுதியாக பிரிப்பதே தீர்வாக அமையும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நகர் துவக்கத்தில் மதுரை பின் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வருகிறது. இதே போல் பெரியகுளம் சட்டசபை, லோக்சபா தொகுதியாக இருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் தொகுதி மறுசீரமைப்பில் பழநி சட்டசபை தொகுதியாகவும், திண்டுக்கல் லோக்சபா தொகுதியாக மாறியது. தனித்தீவாக உள்ள கொடைக்கானல் தாலுகா வளர்ச்சி பணிகள் , சுற்றுலா வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறாத நிலையே நீடிக்கிறது. பெயரில் மட்டும் சர்வதேச சுற்றுலா தலம் என அழைக்கப்பட்டாலும் அடிப்படை கட்டமைப்பு அறவே இல்லாத நிலையே நீடிக்கிறது. ரோப்கார் , ஹெலிபேடு, அட்வன்சர் டூரிசம், மல்டி லெவல் கார் பார்க்கிங், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் மாற்று சாலை திட்டம், மிதவை உணவகம், கண்ணாடி பாலம் என பிரமிப்பான அறிவிப்புகள் மட்டுமே திருப்திபடுத்துவதாக உள்ளது. இவை நடைமுறைக்கு வந்தபாடில்லை. இதை நடைமுறைபடுத்தாத நிலையில் புதிய மாவட்டமாக உருவாக உள்ள பழநி மாவட்டத்துடன் கொடைக்கானல் இணைக்கப்பட உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கொடைக்கானல் வளர்ச்சி பணியில் முக்கியத்துவம் காட்டாத அரசியல்வாதிகள், அதிகார பகிர்வை எடுத்துக் கொள்ள கொடைக்கானல் தாலுகாவை தக்க வைத்துக் கொள்ள போட்டா போட்டியில் ஈடுபடுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா தலமாகவும், பழநி ஆன்மிக தலமாகவும், ஒட்டன்சத்திரம் வணிக ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இம்மூன்றும் புதிய பழநி மாவட்டத்துடன் இணையும் பட்சத்தில் திண்டுக்கல் வெறுமையடையும் என அரசியல் கணக்கு உள்ளது.
இவர்களது அரசியல் களத்தில் பாதிக்கப்படும் கொடைக்கானல் அங்கு இங்குமாக அன்று முதல் இன்று வரை பந்தாடப்படும் சூழல் நிலவுகிறது. 1957 முதல் 1967 வரை மலைப்பகுதி சேர்ந்தவர் எம்.எல்.ஏ .,வாக இருந்தப் போது மலைப்பகுதி மக்களின் கோரிக்கைகள் சட்டசபையில் ஒலித்தது. இதே போன்று கொடைக்கானல் தாலுகா அருகில் உள்ள ஆத்துார் தொகுதி மலை கிராமங்களை இணைத்து ஊட்டி போன்று கொடைக்கானல் தொகுதி உருவாக்க நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் மலைப்பகுதி மக்களின் தேவைகள் , சுற்றுலா உள்ளிட்ட பிற தொழில் மேம்படும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். அதை விடுத்து தொகுதி மறுசீரமைப்பு, மாவட்ட சீரமைப்பு என கொடைக்கானல் தாலுகா மக்களை அழைக்கழித்து வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்தி நடவடிக்கை எடுப்பது மலைப்பகுதி மக்களுக்கு நன்மை அளிக்கும் .அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.