/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகளால் தொடரும் விபத்துகள்
/
சேதமான ரோடுகளால் தொடரும் விபத்துகள்
ADDED : மே 12, 2024 04:14 AM

நத்தம்: -நத்தம் நான்கு வழிச்சாலையிலிருந்து பாலப்பநாயக்கன்பட்டி, பண்ணுவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ரோடு சேதம் அடைந்த நிலையில் இவ்வழியில் பயணிக்கும் மக்கள் அவதியடைகின்றனர்.
நத்தம் நான்கு வழிச்சாலையிலிருந்து பாலப்பநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் பண்ணுவார்பட்டி, சாத்தாம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. தொழில் நிறுவனங்களும் அதிகம் செயல்படுகின்றன. இங்கு ஜல்லி கற்கள் பெயர்ந்து மழைநீர் தேங்கி சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கிராம மக்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் வேலைக்கு சென்று வரும் பணியாளர்களும் பல்வேறு சிரமத்தை அனுபவிக்கின்றனர்.
வாகனங்கள் பழுதாவதுடன் சேதமடைந்த ரோட்டில் பயணிப்பதால் இரவில் டூவீலர்களில் செல்வோர் பல்வேறு விபத்துகளையும் சந்திக்கின்றனர். தனியார் கல்குவாரிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களால் ரோடு சேதமடைந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய பள்ளங்கள் உள்ளது
பால் தாமஸ்,சமூக ஆர்வலர், நொச்சிஓடைப்பட்டி: பல்வேறு கிராமங்களுக்கு நத்தம் நெடுஞ்சாலையிலிருந்து பாலப்பநாயக்கன்பட்டி செல்லும் ரோடு மேடு பள்ளங்களுடன் தண்ணீர் தேங்கி மண் ரோடு போல் உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு 300க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் டூவீலர்களில் செல்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால் ரோட்டில் உள்ள மெகா பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது.
நடக்க முடியவில்லை
நாகராஜ், வழக்கறிஞர், நத்தம்: பாலப்பநாயக்கன்பட்டி சுற்று விவசாய தோட்டங்களில் வசிக்கும் கிராம மக்கள் சேதம் அடைந்த ரோடால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்,வயதானவர்கள், கர்ப்பிணிகள் ரோட்டில் செல்ல முடியாமல் பல்வேறு அவதிகளை சந்திக்கின்றனர். ரோடை சீரமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை தேவை
வீரராகவன், பா.ஜ., ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர், பாலப்பநாயக்கன்பட்டி: நத்தம் நெடுஞ்சாலையிலிருந்து பாலப்பநாயக்கன்பட்டி, பண்ணுவார்பட்டி, சாத்தாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் பிரதான சாலை 5 கிலோ மீட்டருக்கு மேல் படு மோசமாக உள்ளது. ரோடு கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்த அடிப்படையாக உள்ளது. பல ஆண்டுகளாக சேதமடைந்து மோசமாக உள்ள ரோடை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.