/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில்களில் ஆடிப்பூரம்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில்களில் ஆடிப்பூரம்
ADDED : ஆக 08, 2024 05:13 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் நடந்தது. மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்ய சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. நாச்சியார் திருக்கல்யாண நிகழ்ச்சியின் தொடக்கமாக நேற்று மாலை கலச பூஜை, லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டன. ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆண்டாள் நாச்சியார் மணமாலை மாற்றும் நிகழ்வை தொடர்ந்து பக்தர்களின் மங்கல கோஷங்களுக்கு இடையே திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இது போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பலரும் வளையல்கள் வாங்கி கொடுத்து அம்மனை வழிப்பட்டனர் .
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், மலர், வளையல் அலங்காரம் நடந்தது. பல்வேறு வகையான சாதம் படையல் இடப்பட்டன. மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அன்னதானத்துடன் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல்கள் வழங்கப்பட்டது. கன்னிவாடி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம், சக்தி அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கமலவல்லி, ஆண்டாளுக்கு விசேஷ அபிஷேக தீபாராதனைகள் நடந்தது.
பழநி : பழநி பெரிய நாயகி அம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம் ,தீபாராதனை நடந்தது. மாரியம்மன் கோயில் , கச்சேரி புது தெரு கூனகாளியம்மன் , ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், அடிவாரம் காளிகாம்பாள் கோயில், பாலசமுத்திரம் பெருமாள் கோயில்களில் அம்மனுக்கு வளையில் அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது.