ADDED : ஜூலை 22, 2024 05:39 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் வாழை மரங்கள் கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவேண்டும்.
வத்தலக்குண்டு சேவுகம்பட்டி, முத்துலாபுரம், பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக கருகல் நோய் தாக்குதலால் வாழை இலைகள் கருகி வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வாழை பூக்களும் கருகல் நோய் தாக்குதலால் உதிர்ந்து கீழே விழுவதால் வாழைக்காய் பெருக்கம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்குப் பிறகு திடிரென இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் செலவு செய்தும் தற்போது மகசூல் பாதிப்படைந்துள்ளதாக கூறும் விவசாயிகள் தோட்டக்கலை, வேளாண்துறையினர் உடனடியாக இப்பகுதியை பார்வையிட்டு வாழை மரங்களில் ஏற்பட்டுள்ள கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.