/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைப்பகுதியில் தடை இயந்திரங்கள் முகாம்
/
மலைப்பகுதியில் தடை இயந்திரங்கள் முகாம்
ADDED : ஜூலை 16, 2024 04:34 PM

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் தரை இறங்காமல் மலைப்பகுதியிலே முகாமிட்டுள்ளது.
இம்மலைப்பகுதியில் போர்வெல், கம்ப்ரஷர், மண்அள்ளும் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக மலைப்பகுதி முழுமையும் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு ஆளும்கட்சி , அதிகாரிகள் துணையுடன் ஜோராக இயக்கப்படுகிறது. வருவாய்த்துறையினர் பெயரளவிற்கு அபராதம் விதித்து கண்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதனால் இத்தகைய செயல் எவ்வித அச்சமின்றி தொடரத்தான் செய்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் தங்களது பொறுப்புகளை தட்டி கழிக்கும் விதமாக மற்றொரு துறை அதிகாரிகளை கைகாட்டுகின்றனர். சமீபத்தில் பாறை தகர்ப்பு போது தடை இயந்திர வாகனங்களுக்கு அபராதம் விதித்த நிலையில், ஒரு வாரத்திற்குள் மலைப்பகுதியில் உள்ள தடை இயந்திரங்கள் தரை இறங்க அனைத்து வி.ஏ.ஒ.,க்கள் மூலம் அறிக்கை கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ., சிவராம் கூறினார்.
இருந்த போதும் தடை இயந்திரங்கள் மலைப்பகுதியிலே முகாமிட்டுள்ளது. இரவில் தடை இயந்திரங்கள் தங்களது பணிகளை ஜோராக நடத்தி வருகின்றன . சில தினங்களுக்கு முன் கொடைக்கானல் அம்பேத்கார் நகரில் போர்வெல் பணிகள் நடந்தபோது ஏற்பட்ட அதிர்வால் அச்சமடைந்த குடியிருப்பு வாசிகள் வருவாய்த் துறையினருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மலைப்பகுதியில் உள்ள தடை இயந்திர பயன்பாடு வாகனங்களை தரை இறக்க பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். உடந்தையாக செயல்பாடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும்.