ADDED : ஏப் 19, 2024 05:58 AM
திண்டுக்கல்: கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் திண்டுக்கல் மாவட்ட ரோட்டோரங்களில் நிற்கும் மரங்கள் பட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச நெடுஞ்சாலை துறை முன்வர எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட ரோட்டோரங்களில் வாகன ஓட்டிகள் இளைப்பாறவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் புளியமரம்,வேப்ப மரம் போன்ற மரக்கன்றுகளை வளர்த்து பராமரிக்கின்றனர். இந்த மரங்கள் நாளடைவில் பெரிய மரங்களாக வளர்ந்து ரோட்டோரங்களில் வாகன ஓட்டிகள் நின்று ஓய்வெடுக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.
இவைகளை குறிப்பிட்ட காலம் வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பராமரிக்கின்றனர். அதன்பிறகு அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால் மரங்கள் பாதிக்கின்றன.
தற்போது கோடை காலம் என்பதால் மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து போகும் நிலைக்கு வந்துள்ளது. இலையுதிர் காலம் என்பதால் இலைகளும் உதிர்ந்து மரக்கிளைகள் மட்டும் தான் தெரிகிறது. தண்ணீர் வளம் அதிகம் உள்ள இடங்களில் நிற்கும் மரங்கள் மீண்டும் தளிர்விடுகிறது.
மற்ற மரங்கள் தண்ணீரில்லாமல் வறண்டு பட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் ரோட்டோர மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

