/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்றுகளை நடவு செய்யும் 'சி' அமைப்பினர்
/
மரக்கன்றுகளை நடவு செய்யும் 'சி' அமைப்பினர்
ADDED : ஆக 19, 2024 01:12 AM

சுற்றுச்சூழலை பாதுகாத்து ரோட்டோரங்கள்,குளக்கரைகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கின்றனர் 'சி' தொண்டு அமைப்பின் தன்னார்வலர்கள்.
தண்ணீர் தட்டுப்பாடு எனும் பிரச்னை தற்போது அதிகளவில் உள்ளது. மழையின்மை மட்டுமின்றி அபரிமித பருவகால தாக்கமே அடிப்படை.
இதற்கு முக்கிய காரணமாக மரங்கள் அழிப்பு, செயற்கை உரம், பூச்சி மருந்துகள், பாலிதீன் எரிப்பு, மக்கா கழிவுகள், அதிகரிக்கும் வாகன புகை போன்றவற்றால் காற்று, நீர், வான், நிலம் மாசடைகிறது. நிலத்தடி நீரை காப்பதிலும், உயர்த்துவதிலும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆத்துார் அருகே கெப்புசோலைபட்டியை சேர்ந்த 'சி' தொண்டு அமைப்பின் தன்னார்வலர்கள் மரக்கன்றுகளின் மகத்துவத்தை கூறும் விழாக்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் முனைப்பில் பல்வேறு பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. கிராமப்புற உட்புற ரோடுகள்,குளக்கரைகள்,கண்மாய்கள்,வாய்க்கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்வமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இந்த அமைப்பு நடவு செய்து பாதுகாத்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து 1,500 க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை பராமரித்து வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்
ம.கண்ணன், அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர், ஆத்துார்: கொரோனா காலத்தில் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு 300க்கு மேற்பட்ட மூலிகை கன்றுகள் வழங்கினோம். மரக்கன்று வழங்குவது மட்டுமின்றி, மூலிகை கன்றுகளை பராமரிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ராணி மங்கம்மாள் குளம் உள்பட 10க்கு மேற்பட்ட கண்மாய்களின் கூறுவாங்க அடிப்படையில் இருந்த துார்ந்து போன நீர் வழித்தட வரத்து வாய்க்கால்களை, சொந்த செலவில் சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். 25 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் இருந்த சீமை கருவேல மரங்கள் குளங்கள், பொது இடங்களில் இருந்தும் இயந்திரங்கள் மூலம் வேரோடு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. குடகுனாறு வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களோடு இணைந்து நடை பயண விழிப்புணர்வு ஊர்வலம் டூவீலர் வாகன விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தியுள்ளோம்.
--விதைப்பந்துகளும் துாவுகிறோம்
அழகர்சாமி,ஒருங்கிணைப்பாளர்,கெப்புசோலைபட்டி: குளங்கள் துார் வாருதல், மரக்கன்று வளர்ப்பு ஆகிய நோக்கங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
விழாக்கள் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மரக்கன்று நடவு செய்கிறோம். இதற்காக சலுகை விலையில் கிடைக்கும் நர்சரிகளை தேடிச்சென்று பழ மரக்கன்றுகள் மட்டுமின்றி அழகு, மருத்துவ குணமுள்ள மரக்கன்றுகளும் சொந்த செலவில் வாங்குகிறோம்.
சூழலை பாழ்படுத்தும் பாலித்தீன் ஒழிப்பிற்கு மாணவர்களின் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது. பள்ளி மட்டுமின்றி தனியார் கல்வி நிறுவன பயிற்சி மையங்களிலும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறோம். கல்லுாரி மாணவர்கள் மூலம் சமதள பகுதிகள் மட்டுமின்றி மலைப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் விதைப்பந்துகள் துாவினோம். தற்போது இவற்றில் பெருமளவு விதைகள், விருட்சங்களாக வளர்ந்துள்ளன.-