/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கன்னிவாடி பகுதியில் சுண்டல் சாகுபடி துவக்கம்
/
கன்னிவாடி பகுதியில் சுண்டல் சாகுபடி துவக்கம்
ADDED : மார் 02, 2025 05:10 AM
கன்னிவாடி: பனிப்பொழிவை எதிர்நோக்கி ஆத்துார், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களில் சுண்டல் சாகுபடி துவங்கி உள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை தருமத்துப்பட்டி, கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. சமீபத்திய மாதங்களில் பெய்த மழையை நம்பி கிராமங்களில் ஏராளமானோர் சோளம், மக்காச்சோளம், பயறு வகை சாகுபடியில் ஈடுபட்டனர். சில இடங்களில் நிலத்தில் தண்ணீர் தேக்கம், பனிப்பொழிவால் மக்காச்சோள எடை குறைவு போன்ற பிரச்னைகள் உள்ளன. இருந்தாலும் சராசரி விலை கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சில நாட்களாக இரவு நேர பனிப்பொழிவு அதிகரிக்க துவங்கி உள்ளது.
இதனால் தருமத்துப்பட்டி, கரிசல்பட்டி, சின்னப்பபுரம், கந்தசாமிபுரம், வட்டப்பாறை, மேட்டுப்பட்டி, கூத்தம்பட்டி பகுதிகளில் கொத்தமல்லி, சுண்டல் சாகுபடியை பலர் துவக்கி உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தை, மாசி மாத பனிப்பொழிவை நம்பி சுண்டல் சாகுபடியை துவக்கினோம்.
கடந்தாண்டு விலை கிடைக்காமல் சுண்டல் மூடை 5 ஆயிரத்திற்கு விற்றது. பனிப்பொழிவு அதிகரித்தால் இந்தாண்டு விளைச்சலும், விலையும் கணிசமாக கைகொடுக்கும் என நம்புகிறோம்' என்றனர்.