/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
/
கோயில்களில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
ADDED : ஏப் 24, 2024 12:29 AM

திண்டுக்கல் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநிரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சித்ரா பவுர்ணமி என்பதால் சிறப்பு விளக்கு பூஜை, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது.தாடிக்கொம்பு சவுந்தரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் ஆற்றில் இறங்கி அருள் பாலித்த நிலையில், பவுர்ணமி என்பதால் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகிஅம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜையையொட்டி உலக நன்மை வேண்டி நடந்த யாக பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் பூஜை நடத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்னம்பட்டியில் சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. பல்வேறு கிராமங்களில் வசிக்கும் கோயில் தலைகட்டுதாரர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஏப்.14 முதல் மாலை அணிந்து விரதமிருந்தனர். நேற்று அவரவர் ஊர்களிலிருந்து பால் குடங்களுடன் பாதயாத்திரை ஊர்வலமாக தென்னம்பட்டி கோயிலுக்கு வந்தனர். சவடம்மன், நந்தீஸ்வரன், விநாயகர், பாலமுருகன், மதவாணையம்மன், ஆலம்மன் கோயில் சன்னதிகளில் பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.
பாடியூர் : புதுப்பட்டியில் வீருசக்தி விநாயகர், வீருதும்மம்மன் மாலைக்கோயிலில் இரு நாட்களாக நடந்த விழாவில், சங்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு, பெருமாள் அழைப்பு, தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது.
வத்தலகுண்டு: ஏ.பி., நகரில் உள்ள ஆதிசக்தி நாகம்மாள், விநாயகர், காளிகாம்பாள்,கருப்பணசாமி கோயிலில் யாக வேள்வி விழா நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேள்விக்கு பின்னர் அபிஷேகங்கள் நடந்தது.
பழநி : பெரியநாயகி அம்மன் கோயிலிலிருந்து பால் குடங்கள் எடுத்து வந்து திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகம் நடந்தது. வள்ளி, தெய்வானை, முத்துகுமாரசுவாமி எழுந்தருளினார். பெரியநாயகி அம்மன் கோவிலிலிருந்து 108 பால்குடங்கள், திருஆவினன்குடி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் கந்தவிலாஸ் செல்வகுமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி பங்கேற்றனர். நேற்று இரவு பெரிய நாயகி அம்மன் கோவிலிலிருந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி வெள்ளித்தேரில் எழுந்திருளினார். அதன் பின் ரத வீதியில் வெள்ளித் தேரோட்டம் நடந்தது. இதில் இணை கமிஷனர் மாரிமுத்து பங்கேற்றார்.
திண்டுக்கல் : மலைக்கோட்டை ஸ்ரீ அபிராமி அம்மன் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்பு பேரவை, ஹிந்து முன்னணி அமைப்புகள் சார்பில் கிரிவலம் நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் சென்றனர்.திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. ஹிந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். 3 கி.மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவாலயங்கள் உள்பட 22 திருக்கோயில்களிலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
கன்னிவாடி: சோமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால்,இளநீர் ,பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட திரவிய அபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு, விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
தெத்துப்பட்டி: ராஜகாளியம்மன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம் : காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அம்மனை வழிபட்டு சென்றனர்.

