/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வண்டல்மண் விவரம் காட்சிப்படுத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
வண்டல்மண் விவரம் காட்சிப்படுத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
வண்டல்மண் விவரம் காட்சிப்படுத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
வண்டல்மண் விவரம் காட்சிப்படுத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : ஆக 18, 2024 07:08 AM
திண்டுக்கல் : ''வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட குளங்களின் விவரத்தை அனைத்து தாலுகா அலுவலங்களிலும் காட்சிப்படுத்தப்படும்'' என கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
விவசாயிகள் விவாதம்
நல்லசாமி:விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் பாதி ஜி.எஸ்.டி. வரிக்கே போய்விடுகிறது. மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் அல்லது வரியை ரத்து செய்ய வேண்டும். ஒட்டச்சத்திரம் பகுதியில் நாய்கள் ஆடு மாடுகளை கடித்து விடுகிறது இதனை கட்டுப்படுத்த வேண்டும் .
கலெக்டர் : ஜி.எஸ்.டி., வரி குறித்து முடிவெடுக்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. மானியம் உயர்த்தி கொடுப்பது, வரி குறித்தும் அரசிடம் பரிந்துரை செய்கிறோம். மாவட்டம் முழுவதும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.
தங்கவேல்: அய்யலுார் பகுதியில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுவதால் பட்டா நிலங்களை அரசு கையப்படுத்துவதுவதாக தெரியவந்துள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். குஜிலியம்பாறை தோட்டக்கலை அலுவலகம் அருகே உள்ள மின் மயானங்களால் அலுவலக பெண்கள், விவசாயிகள் உட்பட பலரும் சிரமப்படுகின்றனர்.
கலெக்டர்: அரசு நிலங்கள் மட்டுமே சரணாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டா நிலங்கள் எடுப்பது தொடர்பான எந்த திட்டமும் தற்போது இல்லை. தோட்டகலை அலுவலகத்தை சுற்றி சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தர்மர்: ஆர்.கோம்பை மலையடிவாரத்து ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும்.
கலெக்டர்: அணை கட்டுவது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.
கோபால்: நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு பெரியகுளம் நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு உள்ளது, மழைக் காலத்திற்கு முன்பே அகற்ற வேண்டும்.
கலெக்டர்: சம்மந்தப்பட்ட குளம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இடைப்பட்டது . இரு மாவட்ட அதிகாரிகள் நிலத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.
ராஜேந்திரன் : அரசு அறிவித்துள்ள வண்டல் மண் எடுப்பதற்கான தகுதியான குளங்கள் பட்டியலை வழங்க வேண்டும்.
கலெக்டர்: வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட குளங்களின் விவரம் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கனிமவளத்துறை, தாலுகா அலுவலகங்களின் தகவல் பலகையில் குளங்களின் விவரம் வெளியிடப்படும். அதை பார்த்து விவசாயிகள் முறையாக அனுமதி பெற்று வண்டல் மண் எடுக்கலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தெரியாமல் வராதீங்க டோஸ் விட்ட கலெக்டர் -
கடந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கைளுக்கான பதில் மனு குறித்து கலெக்டர் பூங்கொடி கேட்டறிந்தார். அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. அப்போது பேசிய கலெக்டர், விவசாயக் கூட்டத்தில் விவசாயிகள் அனுப்பும் கோரிக்கை மனுக்களுக்கு சரியான பதிலை துறை சார்ந்த அதிகாரிகள் அளிப்பதில்லை. மனுவை ஏற்கிறோம்,நிராகரிக்கிறோம் என்பது உங்களின் முடிவுதான். நிராகரிப்பதற்கு சரியான காரணம் வேண்டும். பதில் மனுவிலும் முறையான விளக்கம் கொடுக்க வேண்டும். அதிகாரிகளின் பதில் மனுக்களில் திருப்தி இல்லை. என்ன கோரிக்கை, என்ன பதில் அளித்திருக்கிறோம் என்பதை நன்கு அறிந்து கொண்டு கூட்டத்திற்கு வாருங்கள். குறிப்பிட்டு கோரிக்கை மனுவின் நிலை என்ன என்று கேட்டால் அப்போதுதான் தேடுகிறீர்கள். இனிமேல் எதுவும் தெரியாமல் கூட்டத்திற்கு வராதீர்கள்.