/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்பில் காட்டேஜ்கள், ரோட்டில் வனவிலங்குகள்; கொடைக்கானல் 6வது வார்டில் தொடரும் அவலம்
/
குடியிருப்பில் காட்டேஜ்கள், ரோட்டில் வனவிலங்குகள்; கொடைக்கானல் 6வது வார்டில் தொடரும் அவலம்
குடியிருப்பில் காட்டேஜ்கள், ரோட்டில் வனவிலங்குகள்; கொடைக்கானல் 6வது வார்டில் தொடரும் அவலம்
குடியிருப்பில் காட்டேஜ்கள், ரோட்டில் வனவிலங்குகள்; கொடைக்கானல் 6வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : மே 31, 2024 06:11 AM

கொடைக்கானல் : குடியிருப்பு பகுதியில் காட்டேஜ்கள், ரோட்டில் உலாவும் வனவிலங்குகள் என பல்வேறு பிரச்னைகளுடன் கொடைக்கானல் நகராட்சி 6 வது வார்டு மக்கள் தினம் தினம் அவதிப்படுகின்றனர்.
சண்முகபுரம், இ.சி.சி., ரோடு, பச்சைமரத்துஓடை, வில்பட்டி ரோடு, நாயுடுபுரம், வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சரிவர எரியாத தெருவிளக்குகளால் இரவில் இருள் சூழ மக்கள் பாதிக்கின்றனர். சேதம் அடைந்த ரோடுகளால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். பயன்பாடு இன்றி உள்ள தடுப்பணையால் மழை நேரங்களில் தண்ணீர் வீணாகும் அவலம் தொடர்கிறது . வனவிலங்குகளால் தினமும் மக்கள் ஒரு வித அச்சத்துடனே நடமாடும் சூழல் நிலவுகிறது . அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடுடன் நோய் தொற்றுக்கும் வழிவகுக்கிறது. குடியிருப்பு பகுதியில் செயல்படும் காட்டேஜ்களால் கூச்சல், குழப்பம், ரோட்டில் வீசப்படும் மதுபாட்டில் என குடியிருப்பு வாசிகள் தவியாய் தவிக்கின்றனர். ஆற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பெரும் பாதிப்பை மக்கள் சந்திக்கின்றனர். சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் ரோட்டோரங்களின் நிறுத்துவதை தவிர்த்து அவரவர் இடங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ,புதிய குடிநீர் குழாய்களால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பள்ளங்கி பச்சை மரத்து ஓடை ரோடு விபத்து அபாயத்தில் உள்ளது. இப்பகுதியில் தடுப்பு சுவர் ஏற்படுத்த வேண்டும். ரோட்டோரம் ,குடியிருப்பு பகுதிகளில் விறகுகளை அடுக்கி வைத்தும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
குப்பையால் சுகாதாரக்கேடு
குமரன்,ஹிந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் : இசிசி பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடு, பன்றிகளால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது .சில ஆண்டுகளுக்கு முன் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பயன்பாடின்றி உள்ளது.
வீடுகள் தோறும் குப்பை வாங்கும் நிலையில் ரோட்டோரம் உள்ள குப்பையை அகற்றாததால் சுகாதாரக்கேடாக உள்ளது.
பள்ளங்களால் விபத்து
கணேசன், பூஜாரி: இசிசி பகுதியில் ஏராளமனோருக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. தெருக் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். தெருவிளக்கு வசதி ஏற்படுத்தாததால் இரவில் தடுமாறும் நிலை உள்ளது. நாயுடுபுரத்திலிருந்து அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பைப் லைன் சீர் செய்ய ரோட்டில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளது.
காட்டேஜ்களால் அவதி
மகேஷ்வரன், ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் : நீதிமன்றம் உத்தரவிட்டும் நீர்நிலை புறம்போக்குகள், வருவாய் புறம்போக்குகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது.
அனுமதி இன்றி ஏராளமான கட்டுமானங்கள் நடந்து வருகிறது.
இந்த வார்டில் உள்ள காட்டேஜ்களில் தங்கும் பயணிகள் இரவு நேரங்களில் கூச்சல் இடுவதும், மது அருந்துவது, மது பாட்டில், குப்பையை குடியிருப்பு பகுதியில் வீசி செல்வது என குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகிறோம்.
காட்டேஜ் பிரச்னைகளுக்கு தீர்வு
கணேசன், கவுன்சிலர்(தி.மு.க.,) : வார்டில் இதுவரை ரூ. 1 கோடி 70 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில் அவை அடங்களில் ஏறாமல் உள்ளது. பட்டா இல்லாதவர்களிடம் தற்போது நகராட்சி மூலம் வீட்டு வரி செலுத்தவும் விண்ணப்பம் வாங்கப்பட்டு அளவீடு செய்யப்பட உள்ளது.
வனவிலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட வன அலுவலர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இ.சி.சி., ரோட்டில் உள்ள தடுப்பணை குடிநீர் உபயோகத்திற்கு பயனற்ற நீராக உள்ளது.
காட்டேஜ்களால் ஏற்படும் பிரச்னைகளை நகராட்சி மூலம் தீர்வு ஏற்படுத்தப்படும். அதே நேரத்தில் ஹோம்ஸ்டே உரிமம் பெற்றுள்ளதால் அவை குறித்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் அனைத்தும் எரிகிறது என்றார்.