ADDED : செப் 05, 2024 04:20 AM

பழநி : பழநி நகராட்சி 17வது வார்டில் தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.
அண்ணா நகர், திருவள்ளுவர் சாலை, ஆர்.ஏப்.ரோடு உள்ளடக்கிய இந்த வார்டில் மாவட்ட கல்வி அலுவலகங்கள், மருத்துவமனைகள் ,எம்.எல்.ஏ., அலுவலகம், கல்யாண மண்டபம் ,வணிக வளாகங்கள் உள்ளதோடு ,உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், சுற்று கிராம மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் வார்டை இணைக்கும் முக்கிய வழி பாதையான கல்லறைத் தோட்டம் அருகில் உள்ள சந்து, பி.பி.என். வணிக வளாகம் அருகில் உள்ள சந்துகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. தெரு நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது . இதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.
சுகாதாரக் கேடு
பாலகுரு தேவசேனாதிபதி, ரெட் கிராஸ் ரோடு: இப்பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் உள்ளன. கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. கல்லறை தோட்டம் பின்புறம் குப்பை குவிந்து உள்ளது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் வெளியூர் மக்கள் அதிகம் நடமாடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
தேவை போலீஸ் கண்காணிப்பு
சரோஜா, குடும்பத் தலைவி,அண்ணா நகர் : மருத்துவமனை அருகே ,தமிழ் இலக்கிய மன்றம் பின்புறம் சாக்கடை சேதமடைந்துள்ளது. சரி செய்ய வேண்டும். அண்ணா நகர் சாலைகள், திருவள்ளுவர் கிராஸ் ரோடில் வெளி நபர்கள் நடமாட்டம் இருப்பதால் இதை போலீசார் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும்.
நாய்களை கட்டுப்படுத்துங்க
சரஸ்வதி, குடும்பத் தலைவி : தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்வோர் ,முதியவர், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.சில குழந்தைகளை நாய் கடித்துள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரிசெய்ய நடவடிக்கை
செபாஸ்டின் , கவுன்சிலர், (தி.மு.க.,) : மக்கள் குறைகள் அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படுகிறது. சில இடங்களில் எரியாமல் இருந்த தெரு விளக்குகள் சரி செய்யப்பட்டன.
குப்பை முறையாக அகற்றப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை , சாக்கடை பிரச்னை குறித்து நகராட்சி கூட்டத்தில் எடுத்துக்கூறி சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விரைவில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது என்றார்.