/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாய பயிர்களை சீரழிக்கும் வனவிலங்குகளால் பாதிப்பு
/
விவசாய பயிர்களை சீரழிக்கும் வனவிலங்குகளால் பாதிப்பு
விவசாய பயிர்களை சீரழிக்கும் வனவிலங்குகளால் பாதிப்பு
விவசாய பயிர்களை சீரழிக்கும் வனவிலங்குகளால் பாதிப்பு
ADDED : மார் 04, 2025 05:22 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
திண்டுக்கல் சிறுமலை, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, பழநி, அய்யலுார், குஜிலியம்பாறை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனப்பகுதிகள் அருகில் விவசாய நிலங்கள் உள்ளன.
வனப்பகுதிகளில் ஏற்படும் கோடை காலங்களில் அங்கு உணவு கிடைக்காத யானைகள், காட்டுமாடுகள், பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சீரழிக்கின்றன.
சில நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து அடிவாரத்திலிருக்கும் தென்னை, வாழை தோப்புகளை சூறையாடிசெல்கின்றன.
சிறுமலை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் சர்வசாதாரணமாக காட்டுமாடுகள் தெருக்களில் சுற்றித்திரிகின்றன.
வனத்துறை நிர்வாகத்திடம் பல புகார்களை கொடுத்து விட்டபோதிலும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுப்பதற்கு முன் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடரும் இப்பிரச்னையால் மலை அடிவார பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடும் சிறு, குறு விவசாயிகள் தங்கள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு வந்துள்ளனர்.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டநிலையில் வனப்பகுதிகளில் போதியளவு தண்ணீர் வசதிகள் இல்லாமல் இருக்கும்.
இதனால் இரைதேடி வனவிலங்குகள் விவசாய நிலங்களை தேடி வரும். அந்த சமயங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறும் நிலை ஏற்படும்.
வனத்துறை நிர்வாகம் இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை முள்வேலிகள்
ராமையா, விவசாயி, திண்டுக்கல்: சிறுமலை பகுதியில் பல ஆண்டுகளாக வாழை விவசாயத்தில் ஈடுபடுகிறேன். காட்டுமாடுகள் போன்ற வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சீரழிக்கின்றன.
இதனால் ரூ.லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளை தடுக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கிறோம். வனத்துறை புகார் கொடுக்கும் போது மட்டும் தடுப்பு நடவடிக்கை செய்கின்றனர்.
மற்ற நேரங்களில் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலன்கருதி விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் வருவதை தடுப்பதற்கான முள்வேலிகள் அமைக்க வேண்டும்.
தவிக்கும் விவசாயிகள்
விக்னேஷ் தியாகராஜன், விவசாயி, திண்டுக்கல்: மாவட்டம் முழுவதும் வனவிலங்குகள் விவசாய பயிர்களை அழிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் எத்தனையோ புகார்களை அதிகாரிகளிடம் கொடுத்த போதிலும் எதற்கும் இதுவரை நடவடிக்கை இல்லை. வனவிலங்குகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் வனத்துறை நிர்வாகம் சுணக்கம் காட்டுகிறது.
இதில் பாதிக்கப்படுவது முற்றிலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். எங்கள் பிரச்னகைளை தீர்ப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.