/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகள்... அச்சுறுத்தும் காட்டு மாடுகள்... பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 5வது வார்டு மக்கள்
/
சேதமான ரோடுகள்... அச்சுறுத்தும் காட்டு மாடுகள்... பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 5வது வார்டு மக்கள்
சேதமான ரோடுகள்... அச்சுறுத்தும் காட்டு மாடுகள்... பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 5வது வார்டு மக்கள்
சேதமான ரோடுகள்... அச்சுறுத்தும் காட்டு மாடுகள்... பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 5வது வார்டு மக்கள்
ADDED : மே 11, 2024 05:43 AM

கொடைக்கானல்: வளர்ச்சி பணிகளில் பாரபட்சம்,சேதமான ரோடுகள்,எந்நேரமும் காட்டு மாடுகள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் கொடைக்கானல் 5வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.
கொடைக்கானல் பாக்கியபுரம், ஜெ.ஜெ , நகர், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர் என்பதால் வளர்ச்சி பணிகளில் நகராட்சி பாரபட்ச நிலை காட்டுகிறது. இங்குள்ள சேதமான ரோடுகளால் மக்கள் ரோட்டில் நடமாட முடியாமல் தடுமாறுகின்றனர். வாய்க்கால் துார் வாரப்படாத நிலையில் இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாத நிலையால் பலரும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். காட்டுபன்றிகள், காட்டுமாடுகள் எந்நேரமும் நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்குகின்றனர். இதன்மீது நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து இடையூறு உள்ளது
பேரின்பம், வியாபாரி, கொடைக்கானல்: ரோடுகள் சேதமானதால் பொதுமக்கள் தடுமாறும் நிலை உள்ளது. பாக்கியபுரம் ரோட்டோரம் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அவசர நேரங்களில் அல்லல்படும் நிலை உள்ளது. தெருக்களுக்கு செல்லும் குறுக்கு பாதை சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். இங்கு வசிப்போரில் பெரும்பாலானவர்களுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. குப்பைகள் சரிவர அள்ளப்படாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இளைஞர்கள் மாணவர்கள் விளையாட்டை ஊக்கப்படுத்த மைதான வசதி ஏற்படுத்த வேண்டும்.
வாய்க்காலை துார்வார வேண்டும்
கில்பர்ட்,சமூக ஆர்வலர்,கொடைக்கானல்: சேதமான வாய்க்காலை கட்டமைத்து அவற்றை துார் வார வேண்டும். இதனால் கொசுக்கள் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தெருவில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும். காட்டுப்பன்றிகள்,காட்டுமாடுகள் குடியிருப்பு பகுதியில் தாராளமாக நடமாடுவதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தெரு நாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
பாரபட்சம் காட்டுகின்றனர்
போஸ் ஜெகநாதன், கவுன்சிலர் (சுயேட்சை): இதுவரை ரூ.10 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. சுயேட்சை கவுன்சிலர் என்பதால் நகராட்சி வளர்ச்சி பணிகளில் பாரபட்ச நிலையை காட்டுகிறது. தொடர்ந்து வார்டில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மற்ற வார்டுகளில் தாராளமாக வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. வார்டில் குப்பைகள் அள்ளுவதில்லை. இது பற்றி அதிகாரியிடம் கூறியும் துப்புரவு பணியாளர்கள் வராத நிலையில் தன்னை அலட்சியப்படுத்துகின்றனர். சி.சி.டி.வி. கேமரா அமைத்துள்ளேன். வார்டில் 33 குடிநீர் இணைப்புகள் இல்லை என மனுயளித்து ஆண்டுகளான நிலையில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. பட்டா இல்லாதவர்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூ. 800 வீதம் ஆவணங்களை சேகரித்து நகராட்சியில் வழங்கிய போதும் பட்டா குறித்த நடவடிக்கை இல்லை. தொடர்ந்து சுயேச்சை கவுன்சிலர் என்பதால் தன்னை புறக்கணிக்கும் நகராட்சி, வளர்ச்சி பணிகள் செய்யாததால் தமிழக முதல்வர் மற்றும் பாரத பிரதமர் அவர்களுக்கு புகார் அளிக்க உள்ளேன் என்றார்.