/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்
/
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED : ஆக 05, 2024 06:58 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆடி ,புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று எள்ளை நீரில் கரைத்து தர்ப்பணம் செய்வர். இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திர குளத்தில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்தனர். அதேபோல், கோட்டை குளம், குடகனாற்றிலும் ஏராளமானோர் குவிந்தனர். கோட்டைமாரியம்மன், அபிராமி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வ.உ.சி., அறக்கட்டளை வ.உ.சி. நந்தவனத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன், செயலர் சாந்தினி பழனிசாமி, பொருளாளர் ஆர்.எம்.கே.ஆர். காசிநாதன் ஏற்பாடுகளை செய்தனர். கிட்டு அய்யர் முன்னிலை வகித்தார்.
நிலக்கோட்டை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். வைகை ஆற்றில் புனித நீராடி மோட்ச தீபம் ஏற்றி தங்கள் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதல் கோயிலுக்கு வர துவங்கியதால் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பழநி சண்முக நதிக்கரையில் குடும்ப முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நேற்று அமாவாசை திதி இருந்தது. எள், பச்சரிசி கலந்த பிண்டம் தயாரித்து குடும்ப முன்னோர்களை நினைத்து வழிபட்டு, ஆற்றில் கரைத்தனர். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர்.