/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விரக்தி... விபத்து... விபரீதம்... முட்டிமோதும் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
/
விரக்தி... விபத்து... விபரீதம்... முட்டிமோதும் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
விரக்தி... விபத்து... விபரீதம்... முட்டிமோதும் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
விரக்தி... விபத்து... விபரீதம்... முட்டிமோதும் மூவேந்தர் நகர் குடியிருப்போர்
ADDED : மே 22, 2024 07:27 AM

திண்டுக்கல்: உபயோகமற்ற குடிநீர் மேல்நிலை தொட்டியால் விரக்தி, ரோடு போடாமல் மண் பாதையாக உள்ளதால் ஏற்படும் விபத்து, துாய்மை பணியாளர்களின் அலட்சியத்தால் சேர்ந்த குப்பையால் பரவும் நோய் தொற்றால் விபரீதம், ஊராட்சியின் நலத்திட்ட உதவியில் பாகுபாடு என பிரச்னைகளுடன் உள்ளாட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் திண்டுக்கல் மூவேந்தர் நகர் குடியிருப்போர்கள் பரிதவிக்கின்றனர்.
திண்டுக்கல் திருச்சி ரோட்டில் உள்ள மூவேந்தர் நகர், அன்பின் நகர், கூட்டுறவு நகர், வெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் ஜோதிலிங்கம், செயலாளர் வெங்கடசுப்ரமணி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆலோசகர் அன்பு கிறிஸ்டியான், செயற்குழு உறுப்பினர்கள், செந்தில்குமார், பரமன், தமிழ்செல்வி, அமுதா கூறியதாவது: எங்கள் பகுதி பெரிய அளவில் பரப்பளவை உள்ளடக்கியதாகும்.
ஆனால் சில அடி துாரமே உள்ள சீலப்பாடி செல்லும் வழியில் உள்ள தெருக்களில் உள்ள வசதிகளில் பாதி கூட எங்களுக்கு கிடைக்காமல் அல்லாடி வருகிறோம்.
பக்கத்து தெருவில் ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் புள்ளிகள் வசிப்பதால் அந்த தெருக்களின் வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் தந்து செயல்படுகிறது.
ஆனால் அதற்கு அடுத்து சில அடி துாரமே உள்ள எங்கள் தெருவில் வசிப்போர்கள் வஞ்சிக்க பட்டவர்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.
ரோடு முதல் குப்பை வரையிலான வரிகளை நாங்களும் முறையாக செலுத்திதான் வருகிறோம். இருந்தும் அதற்கான வசதிகள் செய்து கொடுப்பதில் ஊராட்சி நிர்வாகமானது பாகுபாடு பார்ப்பது நியாயமற்ற செயலாகவே உள்ளது.
ஜல்ஜீவன் பணியில் குளறுபடி
அன்பின் நகர் சாம்பிராணி கம்பெனி அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இதுவரை காட்சி பொருளாகத்தான் உள்ளது. ஒருநாள் கூட அதில் சப்ளை வரவில்லை. இந்நிலையில் கட்டப்பட்ட டேங்க் சேதாரமாகும் நிலையில் உள்ளது. அதற்காக போடப்பட்ட அருகில் உள்ள போர்வெல் இயந்திரம் வரை தனியாரின் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து வருகிறது. டேங்க் கட்டப்பட்டு அதற்கான போர்வெல் செட் அமைத்து சர்வீஸ் வசதியும் வாங்கி வாட்டர் சப்ளை இல்லாத வினோதம் எங்கள் பகுதியில் மட்டும்தான் நடைபெறுகிறது.
ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களை சரிவர குழிதோண்டி புதைக்காததால் அதன் குழாய்கள் பாதைக்கு மேல் வெளியில் தெரியும் படி உள்ளது.
இந்த குழாய்களை கூட சரிவர அமைக்காமல் ஒப்புக்கு வேலை செய்து விட்டு சென்றுள்ளனர். குப்பை சேகரிக்கும் பணியில் தோய்வு கண்டதற்கு துாய்மை பணி வாகனம் பழுதடைந்துள்ளதாக ஊராட்சி நிர்வாகம் பொறுப்பற்ற பதிலளிக்கிறது. அவர்கள் அளிக்கும் பதிலில் எங்களுக்கு உடன்பாடில்லை.
அந்த வாகனத்தை எங்களின் குடியிருப்போர் நலச்சங்க கட்டுப்பாட்டில் கொடுத்தால் பராமரித்து குப்பை சேகரிப்பு பணிக்கு பயன்படுத்த தயாராக உள்ளோம்.
மனுக்கள் அளித்தும் நோ யூஸ்
தற்போது துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரித்தாலும் மூவேந்தர் நகரின் முனையில் கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் வயதானவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.
தெருநாய்கள் ஆதிக்கத்திற்கு வழக்கம்போல் எங்கள் பகுதியும் விதிவிலக்கல்ல என்ற நிலை தொடர்கிறது. ஆரம்ப சுகாதார வளாகம் சீலப்பாடி கிராமத்திற்குள் உள்ளது. அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சற்று முன் தள்ளி அமைத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிரச்னைகள் தொடர்பாக குடியிருப்போர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டர், ஊராட்சி அலுவலகங்களில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் பயனில்லை என்றனர்.

