/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பையை எரிப்பதால் புகை மூட்டம் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் ஜோர் குமுறும் திண்டுக்கல் சி.டி.ஓ. என்.ஜி.ஓ.,குடியிருப்போர்
/
குப்பையை எரிப்பதால் புகை மூட்டம் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் ஜோர் குமுறும் திண்டுக்கல் சி.டி.ஓ. என்.ஜி.ஓ.,குடியிருப்போர்
குப்பையை எரிப்பதால் புகை மூட்டம் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் ஜோர் குமுறும் திண்டுக்கல் சி.டி.ஓ. என்.ஜி.ஓ.,குடியிருப்போர்
குப்பையை எரிப்பதால் புகை மூட்டம் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் ஜோர் குமுறும் திண்டுக்கல் சி.டி.ஓ. என்.ஜி.ஓ.,குடியிருப்போர்
ADDED : மே 29, 2024 05:34 AM

திண்டுக்கல், : தரமற்ற ரோட்டால் காத்திருக்கும் விபத்து, குப்பையை தீயிட்டு எரிப்பதால் உருவாகும் புகைமூட்டத்தால் ஆபத்து, நீரோடைகள் செல்லும் பாதையின் ஆக்கிரமிப்பால் தேங்கும் கழிவுநீர், அதில் உருவாகும் கொசுக்கள், ஆங்காங்கே சிதறி கிடக்கும் குப்பை , பயமுறுத்தும் தெருநாய்கள் என அடுக்கடுக்காக குறைகளை கூறினர் திண்டுக்கல் சி.டி.ஓ. என்.ஜி.ஓ, காலனி குடியிருப்போர்.
திண்டுக்கல் திருச்சி ரோட்டில் உள்ள சி.டி.ஓ. என்.ஜி.ஓ. காலனி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜூடே பெர்னான்ட், துணை ச்செயலாளர் தண்டாயுதம், செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், செந்தில், சித்ரா நாகராஜன் கூறியதாவது: சி.டி.ஓ. என்.ஜி.ஓ.காலனியின் எந்த பகுதியிலுமே ரோடு சரியில்லை என்ற நிலை உள்ளது. அந்த அளவிற்கு ரோடுகள் சேமடைந்து கற்கள் வெளியில் தெரியும்படி பெயர்ந்துள்ளன. வாகனங்கள் செல்லும்போது சிதறி கிடக்கும் கற்கள் டயரில் பட்டு தெரிப்பதால் விபத்து அபாயம் உள்ளது. ரோடுகள் அமைத்து தர பலதரப்பு அதிகாரிகள்மட்டத்தில் முறையிட்டும் பலனின்றி உள்ளது. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளிலும் குப்பை பிரச்னை பெரும் தலைவலியாக உள்ளது. குடியிருப்போர்கள் அதிகம் முறையிட்டால் மட்டும் அடுத்த சில நாட்களில் துாய்மை பணிக்கான ஊழியர்கள் கண்களில் படுவர்.
ஆங்காங்கே புகை மூட்டம்
மற்ற நாட்களில் அவர்களை பார்க்க முடியாத நிலை தொடர்கிறது. என்.ஜி.ஓ. காலனி, ராமர் காலனி செல்லும் பாதையிலும் சி.டி.ஓ., காலனி பகுதிகளிலும் குப்பை ரோட்டின் ஓரத்தில் குவிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் குப்பை நடுவேதான் ரோட்டில் செல்ல முடியும் என்ற நிலை உருவாகிறது. அதிலும் குப்பை அகற்றாமல் துாய்மை பணியாளர்களே தீயிட்டு கொளுத்தி செல்லும் நிலை தொடர்வதால் எங்கள் குடியிருப்பு பகுதியானது போரில் பாதிக்கப்பட்ட இடங்களை போல் ஆங்காங்கே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் காற்று மாசடைந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் பச்சை மரத்திற்கு அடியில் குப்பையை தீயிட்டு எரிப்பதால் மரம் பட்டு போய் பரிதாபமாக காட்சியளிக்கிறது. செயலிழந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் இந்த மரங்கள் காற்றால் விழுந்து விபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. அதற்குள் மரங்களை அகற்ற வேண்டும். உழவர் சந்தையின் பின்புறமுள்ள விளையாட்டு மைதானம் சேதமடைந்து உள்ளது. அதன் சுற்றுச்சுவர் இடிந்துள்ளதால் இரவில் சமூக விரோத செயல்களின் மையமாக உள்ளது. இரவு நேரத்தில் குடியிருப்பாளர்கள் அந்த பகுதியை கடந்து செல்லவும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும்.
படையெடுக்கும் கொசுக்கள்
குப்பை பிரச்னையின் தொடர்ச்சியாக கழிவு நீர் பிரச்னை மொத்த பகுதியிலும் மேலோங்கி உள்ளது. கழிவுநீர் சென்று சேரும் ராஜா குளத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ளது. இதை அகற்றாமல் கழிவு நீர் தேக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. நீரோட்டம் செல்ல வழியின்றி கழிவுநீர் தேங்குவதால் உருவாகும் கொசுக்கள் மாலை நேரங்களிலே வீடுகளை நோக்கி படையெடுக்கின்றன. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி சார்பில் அடிக்கடி கொசு மருந்தையாவது அவ்வப்போது அடித்து மக்களை காக்க வேண்டும். ஆங்காங்கே குவிந்திருக்கும் குப்பை உணவை தேடி தெருநாய்கள் படையெடுத்து வருவதால் வாகனங்களில் செல்ல பயப்படும் சூழல் நிலவுகிறது. மாடுகளும் பல நேரங்களில் ரோட்டை மறித்தபடி குப்பைகளை மேயும் நிலை தொடர்கிறது. இதற்கோர் தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். அடிப்படை வசதிக்கான வரிகளை நிலுவையின்றி செலுத்துகிறோம். ஆனால் அடிப்படை வசதியின்றி வாழ்ந்துவருகிறோம். யாரிடம் முறையிட்டாலும் பொறுப்பான நடவடிக்கையோ தீர்வோ ஏற்படாமல்தான் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த அவலம் நீடிப்பதால் இதுதான் எங்கள் குடியிருப்பு பகுதியின் நிரந்தர நிலையோ என விதியை எண்ணி மனமுடைந்து உள்ளோம் என்றனர்.