/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைப்பகுதியில் வறட்சி; பாதிப்பில் அவரை
/
மலைப்பகுதியில் வறட்சி; பாதிப்பில் அவரை
ADDED : ஏப் 11, 2024 06:07 AM

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் நீடிக்கும் வறட்சியால் அவரை பயிர் பாதித்து இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் இம்மலைப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் கோழி, பெல்ட் அவரை சாகுபடி செய்வது வழக்கம். மலைப்பகுதியில் மாறிவரும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப 10 ஆண்டுகளாக மலைப்பகுதியில் வெப்ப மண்டல பயிரான அவரை சாகுபடி செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட அவரை தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. நடவு செய்ததிலிருந்து மழையின்றி கிணறு, ஆழ்துளை மூலம் தண்ணீர் பாசனம் செய்தனர். மலைப்பகுதியில் தகிக்கும் கோடை வெயிலால் நீர் சத்தின்றி இதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் பழுத்து வருகிறது. கூட்டுப்புழு, காய் புழு தாக்குதல் ,பூக்கள் உதிர்தல் உள்ளிட்ட நோய் தாக்குதலால் விவசாயமும் அடியோடு பாதித்துள்ளது.
இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பறிக்கப்படும் அவரைக்காய் மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மார்க்கெட் க்கு அனுப்பப்படுகிறது. கோடை மழை பெய்தால் மட்டுமே இவ்விவசாயத்தை நம்பி உள்ளோர் வாழ்வாதாரம் உயரும் நிலை உள்ளது. அதே நிலையில் மலை விவசாய பயிர்களான காபி, ஆரஞ்சு, ஏலம், மிளகு உள்ளிட்ட பயிர்களும் வாடி வருகின்றன. வருணபகவான் மனம் வைத்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் நிலை உள்ளது.

