ADDED : மார் 09, 2025 02:42 AM
திண்டுக்கல்: 'பார்க்கிங்' உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல், பழனியில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சீசன் நேரங்களில் லட்சக்கணக்கானோரும், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் வந்து செல்வர்.
பெரும்பாலானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதாகக் கூறியே இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.
ஆனால் போதிய பார்க்கிங் வசதி கிடையாது. தனியார் பார்க்கிங்கில், 100 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது நுழைவுக்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பஸ்சுக்கு நாள் ஒன்றுக்கு 130 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. லாரிக்கு 100ல் இருந்து 115, வேனிற்கு 90ல் இருந்து 100, காருக்கு 60ல் இருந்து 70 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.