/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் வரத்து குறைய விலை உயர்ந்த மல்லிகை
/
மழையால் வரத்து குறைய விலை உயர்ந்த மல்லிகை
ADDED : மே 24, 2024 03:32 AM
திண்டுக்கல்: பூக்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தொடர் மழையால் வரத்து குறைய கிலோ மல்லிகை ரூ.1000 ஆக விற்பனையாகிறது.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட்டிக்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து வெளி மாவட்டம் ,மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வைகாசி பிறந்துள்ள நிலையில் முகூர்த்த தினம் மே 19 ம் தேதி வந்தது. அதற்கு முதல் நாள் முதலே பூக்களின் விலை உயரத் தொடங்கியது.
வைகாசி விசாகம் , சுவாதி நட்சத்திரம் தொடர்ந்து முகூர்த்த நாள் வருவதால் பூக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொடர் மழையின் காரணமாக மல்லி, முல்லை வரத்தும் குறைந்துள்ளதால் இதுதான் விலை என்ற நிலை இல்லாத சூழல் நிலவுகிறது. காலையில் விலை குறைந்து விற்பனையாகும் பூக்கள் நேரம் செல்லச் செல்ல உச்சத்தை தொடுகின்றன.
கடந்த வாரம் வரை ரூ.400 க்கு விற்ற மல்லிகை மே 18 முதல் ரூ.1000 என்ற விலையிலே விற்பனையாகிறது.
நேற்று காலை ரூ.750 முதல் ரூ.800 க்கு விற்பனையான மல்லிகை மதியம் 12:00 மணியை நெருங்கையில் ரூ.1000 ஐ தொட்டது.
இது போல் முல்லை ரூ.500 , செண்டு ரூ.80, சம்மங்கி ரூ.80, சாமந்தி ரூ.200, அரளி ரூ.200, பட்டன்ரோஸ் ரூ.180, ரோஸ் ரூ.160, கோழிகொண்டை ரூ.100 க்கு விற்பனையானது. மழை சற்று குறைந்து வரத்து அதிகமானல் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.