/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அறிவுரை
/
ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அறிவுரை
ADDED : மார் 06, 2025 03:35 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை துாய்மையாகவும், சுகாதாரமாக எப்படி பராமரிக்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
திண்டுக்கல், ஆத்துார், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவைகள் தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை. பல ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் மத்தியில் எலிகள் உலாவுகின்றன என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் செயல்படும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களை நேரில் அழைத்து கூட்டம் நடத்தி அங்குள்ள பொருட்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்க கூட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் இக்கூட்டம் நடந்தது. மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, ஜாபர்சாதிக், சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். 100க்கு மேலான ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி கூறியதாவது: ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் தேக்கி வைக்கப்படுகிறது. பணியாளர்கள் முறையாக பராமரிக்காமல் இருப்பதால் எலிகள், பூச்சிகள், புழுக்கள் போன்றவைகள் உணவு பொருட்களை நாசம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
இதை தடுக்க ரேஷன் கடை பணியாளர்கள் உணவு பொருட்களை துாய்மையாக கையாளவேண்டும். பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும் போது கையுறைகளை பயன்படுத்த வேண்டும். கட்டடங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்றார்.