/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்நடைகளுக்கு பாதிப்பா... 'ஹலோ' சொல்லுங்க
/
கால்நடைகளுக்கு பாதிப்பா... 'ஹலோ' சொல்லுங்க
ADDED : ஏப் 17, 2024 05:00 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் எங்கேயாவது ஆடு,மாடு,நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் போன் எண்ணுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் ஏராளமான மாடுகள்,ஆடுகள்,நாய்கள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன.
இதன் உரிமையாளர்கள் முறையான பராமரிப்பின்றி கால்நடைகளை ரோட்டில் விடுவதால் இவைகளால் வாகனஓட்டிகள் முதல் பாதசாரிகள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். சில நேரங்களில் தண்ணீர்,உணவு இல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்ட கால்நடைகள் பலரோட்டோரங்களில் நடக்க முடியாமல் படுத்து கிடக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இவைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றால் மட்டும் அதன் உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்கின்றனர். ஆனால் கால்நடைகளை பராமரிக்க தவறுகின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால் வறட்சியான நிலையை சமாளிக்க முடியாமல் கால்நடைகள் நகரின் பல இடங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிகின்றன.
இவைகளில் மருத்துவ வசதி கிடைக்காமல் உயிரிழக்கவும் செய்கின்றன. பொது மக்கள் ரோட்டோரங்களில் உடல்நலம் சரியில்லாமல் சுற்றித்திரியும் கால்நடைகளை கண்டால் உடனே மாநகராட்சி நிர்வாகத்திற்கு 0451 2422 019 ல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

