ADDED : மார் 12, 2025 06:21 AM
திண்டுக்கல்; கர்நாடகா, கோவா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து திண்டுக்கல்லுக்கு பார்சல் சர்வீஸ் மூலம் மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா என மது விலக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் செயல்படும் பார்சல் சர்வீஸ் அலுவலகங்களில் ஆய்வு செய்தனர்.
கர்நாடகா, கோவா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி திண்டுக்கல்லுக்கு பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்புவதாக மது விலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
அதன்படி திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் 20க்கு மேலான பார்சல் சர்வீஸ் அலுவலகங்களுக்கு நேரில் சென்று வெளி மாநிலங்களிலிருந்து வரும் பார்சல்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் எந்த மது பாட்டில்களும் சிக்கவில்லை. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களிலிருந்து பார்சல்களை கொண்டு வரும் போது முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பில்கள், ஆவணங்களை சரிபார்த்த பின் அனுமதிக்க வேண்டும்.
மது பாட்டில்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பார்சல்களை அனுப்பும் நபர்களின் முகவரியை சரியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என போலீசார் பார்சல் சர்வீஸ்களில் பணியாற்றுவோரிடம் அறிவுறுத்தினர்.