ADDED : பிப் 15, 2025 04:40 AM
திண்டுக்கல் : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுகந்தி தலைமை வகித்தார்.
ஒட்டன்சத்திரத்தில் வட்டக்கிளை செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மகாராஜா, ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் நல்லதம்பி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் கிருஷ்ணவேணி பேசினர். பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகி பால்பாண்டி நன்றி கூறினார்.
வேடசந்துார் : தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் , அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து வேடசந்துார் தாலுகா அலுவலகத்தின் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். 15 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.