/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயிகள் பங்களிப்புடன் பசுமை ஊராட்சியாக மாறும் கல்வார்பட்டி
/
விவசாயிகள் பங்களிப்புடன் பசுமை ஊராட்சியாக மாறும் கல்வார்பட்டி
விவசாயிகள் பங்களிப்புடன் பசுமை ஊராட்சியாக மாறும் கல்வார்பட்டி
விவசாயிகள் பங்களிப்புடன் பசுமை ஊராட்சியாக மாறும் கல்வார்பட்டி
ADDED : ஆக 26, 2024 07:06 AM

வேடசந்துார் தாலுகாவில் உள்ளது கல்வார்பட்டி ஊராட்சி. திண்டுக்கல் கரூர் நான்குவழிச்சாலை இந்த ஊராட்சியின் மையப் பகுதியில் செல்கிறது. மாவட்ட எல்லையாக உள்ள இந்த ஊராட்சியின் வடகோடியில் தான் ரங்கமலை, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி உள்ளது. ஓரளவு பசுமை நிறைந்த இந்த பகுதியில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பு இல்லை. இது மட்டுமன்றி நுார்பாலைகளுடன் போதிய வேலை வாய்ப்புகளும் இங்குள்ளது .
இந்த ஊராட்சியில் கல்வார்பட்டி, காசிபாளையம், ரங்கநாதபுரம், பூணுாத்து உள்ளிட்ட 32 கிராமங்கள் உள்ளன. ஊராட்சியின் தற்போதைய தலைவராக உள்ளவர் டாக்டர் சுகுணா. ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற வேண்டுமென்ற நல்ல நோக்கில் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். காசிபாளையம் அழகாபுரி ரோட்டில்
5 கிலோ மீட்டர் துாரத்திற்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பூணுாத்து மயானப் பகுதியில் 50 மூங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தொடர் வறட்சி காரணமாக தற்போது காய்ந்திருந்தாலும் மீண்டும் அங்கே மரக்கன்றுகள் நட உள்ளன. பல இடங்களில் 100 நாள் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளை தோண்டி வைத்துள்ளனர். தற்போது மழை பெய்ய துவங்கி உள்ளதால் நடப்பு ஆண்டில், வேம்பு புங்கை, புளிய உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நோக்கில் மரக்கன்றுகளை வாங்கி தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகின்றனர். கல்வார்பட்டி ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பதோடு லட்சம் மரங்களை வளர்க்க வேண்டும் என்பதும் இவர்களின் நோக்கமாக உள்ளது.
பசுமையே நோக்கம்,லட்சியம்
டாக்டர் எஸ்.சுகுணா, ஊராட்சித் தலைவர், கால்வார்பட்டி : ஊராட்சியில் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். தற்போது மழை பெய்ய துவங்கியுள்ளதால் ஆயிரம் மரக்கன்றுகளை கொண்டு வந்து வைத்துள்ளோம்.
விரைவில் அதை நட்டு கூண்டு அமைத்து பராமரிக்க உள்ளோம். கிராமப்புற சாலைகளில் மரக்கன்றுகளை நட்டு அப்பகுதி விவசாயிகள் பங்களிப்புடன், எங்கள் சாலை ,எங்கள் கடமை என போர்டு வைத்து அப்பகுதி விவசாயிகளின் பெயர்களை எழுதி மரக்கன்றுகளை பராமரிக்க உள்ளோம். கல்வார்பட்டி ஊராட்சியை பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றுவதே எங்கள் நோக்கம். எங்களது லட்சியம் என்றார்.
ஆயிரம் மரக்கன்று நட முடிவு
ஏ.ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர், கல்வார்பட்டி: ஊராட்சியின் பல்வேறு சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நன்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.
பூணுாத்து பகுதியில் தற்போது மரக்கன்றுகளை நடும் நோக்கில் குழிகள் எடுத்து வைத்துள்ளோம். இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் மரக்கன்றுகளை பராமரிப்பதிலும், புதிய கன்றுகளை வைப்பதிலும் தொய்வு ஏற்பட்டது. தற்போது நல்ல மழை காலம் துவங்கியுள்ளதால் கூடுதலாக ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உள்ளோம். ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்றுவதே எங்களது நோக்கம் என்றார்.