/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பசுமையை காக்கும் கோம்பைபட்டி ஊராட்சி
/
பசுமையை காக்கும் கோம்பைபட்டி ஊராட்சி
ADDED : மே 13, 2024 06:01 AM

அரசு நிலங்கள் கோயில் வளாகங்கள்,பள்ளிகள், குளக்கரைகள் என பல பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையை வளர்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்தி வருகிறது கோம்பைப்பட்டி ஊராட்சி நிர்வாகம்.
கோம்பைப்பட்டி ஊராட்சியில் கே.அய்யாபட்டி,கோம்பைப்பட்டி, சின்ன கோம்பைபட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது.
கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள், அரசு பள்ளிகள், குளங்கள், கோயில் வளாகப் பகுதிகள் ரோட்டோரம் உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி சார்பாக பல்லாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து வளர்க்கப்படுகிறது.
பசுமையான நிழல் தரும் பல மரங்களை வளர்க்கும் நோக்கில் கோம்பைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் பல வகையான மரங்களை அரசு,தனியார்பண்ணைகளிலிருந்து வாங்கி காலியாக உள்ள அரசு நிலங்களை தேர்வு செய்து அங்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டும்,ஊராட்சி பணியாளர்களைக் கொண்டும் சுத்தம் செய்யப்படுகிறது. தேக்கு, வேம்பு, புங்கன், அரச மரம் உள்ளிட்ட பல வகையான மரங்களை நடவு செய்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் வேலி அமைத்து அதை பராமரிக்கவும் செய்கின்றனர்.
பணியாளர்களை குழுக்களாக பிரித்து வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்றியும் முறையாக வளர்க்கின்றனர். ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிகளிலும் நிழல் தரும் மரங்களை நட்டு மாணவர்களை ஊக்குவிக்கின்றனர்.
பாராட்டுக்குரிய செயல்
சி.ஆர்.ஹரிஹரன்,கோம்பைப்பட்டி ஒன்றிய கவுன்சிலர், வேம்பார்பட்டி: மரங்கள் அதிகப்படியாக வெட்டப்படுவதால் பூமி வெப்பமாதல் அதிகரித்து பருவநிலை மாறுதல் ஏற்பட்டு விவசாயம் பெரிதும் பாதிப்பு சந்திக்கிறது.
அனைவரும் ஒன்றிணைந்து ஊராட்சி பகுதியை பசுமையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்க்கின்றனர்.
நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரித்து தண்ணீர் ஊற்றி வளர்க்கும் பணிகளையும் செய்கின்றனர். இவர்களின் முயற்சியால் கே.அய்யாபட்டியில் உள்ள அய்யனார் கோயில், பெருமாள் கோவில்பட்டி பெருமாள் கோயில்,அரசு நடுநிலைப்பள்ளி வளாகம், குளக்கரைகள்,ரோட்டோரங்களில் அதிக மரங்கள் நடப்பட்டுள்ளது. இயற்கையை காக்கவும்,மழை பெறவும் கோம்பைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் எடுக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
கா.தமிழரசி, ஊராட்சி தலைவர், கோம்பைபட்டி: மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல் தொடர்ந்து மரங்களை அழிப்பதால் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு எதிரான காலநிலை மாற்றம் பூமி வெப்பமாதல், இயற்கை சீற்றங்கள், பருவத்தில் மழை பெய்யாமல் போதல் போன்ற இயற்கைக்கு மாறான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் இயற்கையை காப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் பங்கு உண்டு. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது ஒரே வழி என நாங்கள் புரிந்து கொண்டோம். இதனால் 4 வருடங்களாக எங்கள் ஊராட்சி உறுப்பினர்களின் துணையுடன் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று ஒரு இலக்கை நிர்ணயித்தோம்.
ஊராட்சி நிதியில் மரக்கன்றுகளை வாங்கி ஊராட்சி பணியாளர்கள்,100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு மரங்களை அதிகளவு நடவு செய்து வளர்க்கிறோம்.