ADDED : ஜூலை 08, 2026 11:06 PM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே டயர் பஞ்சராகி ரோட்டோரம் நின்ற சரக்கு லாரி மீது டூவீலர் மோதியதில் இருவர் பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பகுதியில் இருந்து மரம் லோடு ஏற்றிய லாரி திண்டுக்கல் நோக்கி சென்றது. சிவகங்கை கண்ணாயிருப்பு பகுதியைச் சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் 32, லாரியை ஓட்டினார்.
நேற்று அதிகாலை 12:30 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திராப்பட்டி அருகே வந்தபோது லாரியின் பின்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் ரோட்டோரம் லாரியை நிறுத்திவிட்டு பஞ்சரான டயரை டிரைவர் கழற்றினார்.
அவருக்கு நத்தம் வேலாயுதம்பட்டியைச் சேர்ந்த பொண்ணுக்காளை 50, உதவினார்.
அப்போது டூவீலரில் வந்த நத்தம் மூங்கில்பட்டியைச் சேர்ந்த சித்திரைவேலு 28, ரோட்டில் நின்றிருந்த பொண்ணுக்காளையை இடித்து தள்ளிவிட்டு லாரியின் பின்புறம் மோதினார். இவ்விபத்தில் சித்திரைவேலு அதே இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த பொண்ணுகாளை மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
