/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடையை' உடைக்கும் இயந்திரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நிலச்சரிவு அபாயம்
/
'கொடையை' உடைக்கும் இயந்திரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நிலச்சரிவு அபாயம்
'கொடையை' உடைக்கும் இயந்திரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நிலச்சரிவு அபாயம்
'கொடையை' உடைக்கும் இயந்திரங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நிலச்சரிவு அபாயம்
ADDED : ஜூன் 25, 2024 12:19 AM

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாட்டை தடுக்காத அதிகாரிகளால் நிலச்சரிவு அபாயம் உள்ளது.
சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமானோர் நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். அதில் நவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கனரக இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். போர்வெல், மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த இயந்திரங்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய கலெக்டர் வள்ளலார் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இயந்திர பயன்பாட்டிற்கு தடை விதித்தார். அந்த உத்தரவு தற்போது வரை நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும் வருவாய், வனம், புவியியல், நகராட்சி நிர்வாகங்கள் விதிகளை மீறி இவ்வகை இயந்திர பயன்பாட்டை அனுமதிக்கின்றன். இதற்காக புரோக்கர்கள் மூலம் கவனிப்புகளும் நடக்கின்றன.
போர்வெல் பணிகள் ஜோர்
பெயரளவிற்கு இயந்திர பயன்பாடு குறித்த புகார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சரி. அவை மறுநாளே எவ்வித அச்ச உணர்வும் இன்றி பயன்பாட்டில் உள்ளன. சில வாரங்களாக பாம்பார்புரம் மெயின் ரோட்டில் 30 அடிக்கு மேலான மேடான பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து புகார் சென்றும் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இத்துடன் போர்வெல் பயன்பாடும் ஜோராக நடக்கிறது. கம்பரஷர் உதவியுடன் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுவது உள்ளிட்ட விதிமீறல் விஷயங்கள் கொடைக்கானலில் தாராளமாக நடக்கின்றன.
அச்ச உணர்வு இன்றி விதிமீறல்
விதிகளை மீறி கட்டுமானங்கள் நடப்பதும், நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் ஏற்படுத்துவதையும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மாறாக ஒவ்வொரு அரசு துறையினரும் தனக்கு தட்டி கேட்க அதிகாரம் இல்லை என நழுவுகின்றனர்.
இதுபோன்ற அசாதாரணமான நிலை கொடைக்கானலில் எதிர்காலத்தில் நிலச்சரிவுக்கும் வித்திடும் அபாயம் உள்ளது. மேலும் தடை இயந்திரங்களை பயன்படுத்தும் புரோக்கர்கள், உரிமையாளர்கள் அச்ச உணர்வு இன்றி தங்களது பணிகளை அன்றாடம் செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நடவடிக்கை உறுதி
மாவட்ட வருவாய் ஆய்வாளர் சேக்முகைதீன் கூறியதாவது: கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட இயந்திரப்பயன்பாடு நடக்கும் பகுதிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகார் வந்தால் நானே நேரில் சென்று நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
சுற்றுலா நகரில் தடை இயந்திர பயன்பாட்டை ஒழுங்குபடுத்த இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்.