/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி உரங்கள் விற்பனை செய்தால் கட்டாயம் நடவடிக்கை
/
போலி உரங்கள் விற்பனை செய்தால் கட்டாயம் நடவடிக்கை
ADDED : ஜூன் 21, 2024 05:24 AM

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் போலி உரங்கள் விற்பனை செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்''என,வேளாண் இணை இயக்குநர் அனுசியா தெரிவித்தார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு வளர்ச்சித் திட்டம் குறித்து...
திண்டுக்கல் மாவட்டம் 14 வட்டாரங்கள், 2,27,710 எக்டேர் சாகுபடி பரப்பு கொண்டது. கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம் மூலமாக கடந்த 3 வருங்களாக 190 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு பல்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் 60 கிராமங்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
திட்டத்தின் நோக்கம் என்ன...
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல் நீர்வள ஆதாரங்களை அதிகப்படுத்துதல், சோலார் பம்பு செட்டுகள் அமைத்தல், விளைபொருட்களை மதிப்புகூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல், கால்நடைகளை முறையாக பராமரித்து பால் உற்பத்தியை அதிகரிப்பது, புதிய பட்டா, பட்டா மாறுதல் வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக அதிக பயின் கடன்கள் வழங்குதல், கால்வாய் வழித்தடங்களை துார்வாருதல்.
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து...
அதிகப்படியான பூச்சி மருந்துகளால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இறப்பதால் மண்ணின் நுண்ணுயிர் சத்து குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பசுந்தாள் உர உபயோகத்தை ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வினியோகம் செய்யப்படும். நன்மை தரும் பூச்சியினங்களை கண்டறிந்து, ரசாயன மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க, தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய உழவர்கள், உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
பி.ம்., கிஷான் திட்டத்தில் பயனாளிகள் உள்ளார்களா...
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,09,383 விவசாயிகளில் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்த 73,043 விவசாயிகளுக்கு பி.ம்., கிஷான் 17 வது தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுவிட்டது.
நுண்ணீர் பாசனம் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறதா...
பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா -இத்திட்டம் விவசாய நிலங்களுக்கு பாசன நீரை வழங்க செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சொட்டு நீருக்கும் அதிக பயிர் சாகுபடி செய்யவதே நோக்கம். இத்திட்டம் எம்.ஐ.எம்.ஐ.எஸ்.(MIMIS) என்ற வலைதளத்தின் வாயிலாக செயல்படுகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் 5 எக்டர் வரையிலான நிலத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
போலி உரங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கிறீர்களா...
போலி உரங்கள் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். கண்டறியப்பட்டால் 3 மாதம் முதல் 7 வருட சிறை தண்டனையோடு அபாரதம் விதிக்கப்படும்.
மண்வள அட்டை விநியோகம் வழங்கப்படுகிறதா....
2023--24ல் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கிய மண்வள அட்டைகள் 506, விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கிய நீர் மாதிரி அட்டைகள் 352, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலமாக 5926 மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 2024--25ல் தற்போது தான் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.