/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆலை கழிவுகளால் நிலத்தடிநீர் பாதிக்கும் நாகம்பட்டி ஊராட்சி
/
ஆலை கழிவுகளால் நிலத்தடிநீர் பாதிக்கும் நாகம்பட்டி ஊராட்சி
ஆலை கழிவுகளால் நிலத்தடிநீர் பாதிக்கும் நாகம்பட்டி ஊராட்சி
ஆலை கழிவுகளால் நிலத்தடிநீர் பாதிக்கும் நாகம்பட்டி ஊராட்சி
ADDED : மே 28, 2024 04:58 AM

வேடசந்துார், : சேதமான ரோடுகள், ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் முழுவதும் உவர்ப்பு நீராக மாறி குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர் நாகம்பட்டி ஊராட்சி மக்கள்.
நாகம்பட்டி, லகவனம்பட்டி, தம்மனம்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, சேணன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி உள்ளிட்ட 18 குக்கிராமங்கள் அடக்கியது நாகம்பட்டி ஊராட்சி. வேடசந்துார் பேரூராட்சியை ஒட்டிய இந்த ஊராட்சியின் கிழக்கு பகுதியில் கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை சென்றதால் நுாற்பாலை உள்ளிட்ட தொழில்களும் வளர்ச்சி பெற்றன.
15 ஆண்டுகளுக்கு முன் இருவழிச்சாலையாக இருந்த இந்த நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைத்ததால், நாகம்பட்டி ஊராட்சியின் மையப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை செல்கிறது.
இதனால் தம்மனம்பட்டி கொன்னாம்பட்டி இடையே, நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து செல்ல பாலம் வசதி இல்லாததால் இங்கு விபத்துக்கள் தொடர்கதையாக உள்ளது. குடகனாறு கழிவு நீர், ஆலை கழிவுகளால் இப்பகுதியில் குடிநீர் என்பது முழுக்க முழுக்க உவர்ப்பு நீராக மாறிவிட்டது. நாகம்பட்டியில் மட்டுமே பொதுமக்களின் நலன் கருதி துாய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.5 செலுத்தி மக்கள் ஒரு குடம் தண்ணீர் பிடிக்கலாம்.
இந்த ஊராட்சியில் மற்ற குக்கிராம மக்களும் டூவீலர்களில் வந்து இங்கு தான் தண்ணீர் பிடிக்கின்றனர். இதனால் மக்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.
வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோடு மேம்பாலம் அருகே நாகம்பட்டிக்கு பிரிந்து செல்லும் ரோட்டில் 2 இடங்களில் பாலம் வசதி இல்லாததால் மழை காலங்களில் மக்கள் மிகுந்த போக்குவரத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயம் கேள்விக்குறியானது
பி.ராஜேந்திரன், ஊர் மணியம், நாகம்பட்டி: நாகம்பட்டியில் 18 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுற்றுப்பகுதியில் உள்ள ஆலை கழிவு நீர், குடகனாறு ஆற்றுப்பகுதியில் வரும் கழிவு நீரால் நிலத்தடி நீர் 100 சதவீதம் மாசடைந்துவிட்டது. இப்பகுதியில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
நாகம்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்கு தனி கட்டட வசதி இல்லாததால் மற்றொரு அரசு கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு ரேஷன் கடைக்கு என தனி கட்டடம் கட்ட வேண்டும். கூடுதலான மக்கள் உள்ள நிலையில் இங்கு ஒரு திருமண மண்டபம் அவசிய தேவையாக உள்ளது. ஊராட்சி சார்பில் பொது திருமண மண்டபம் அமைக்க வேண்டும்.
பஸ் வசதி வே ண்டும்
ஆர்.ராஜேந்திரன், ஊர் தலைவர், நாகம்பட்டி: நாகம்பட்டி ஊருக்குள் நுழையும் இடத்தில் வலது புறத்தில் பயன்பாடற்ற கழிப்பறை உள்ளது. வேறு இடத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்ட நிலையில் இது தற்போது தேவையில்லை.
மிக மோசமாக சேதம் அடைந்துள்ள அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் நாகம்பட்டிக்குள் மினி பஸ் வந்து சென்றது.
இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் பயன்பெற்றனர். 3 ஆண்டுகளாக அந்த பஸ் வராததால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். நிறுத்தப்பட்ட மினி பஸ் சேவை மீண்டும் துவக்க வேண்டும்.
தண்ணீர் தேவை அதிகரிப்பு
டி.கார்த்திகேயன், சமூக ஆர்வலர், தம்மனம்பட்டி: நாகம்பட்டி ஊராட்சியின் மையப்பகுதியில் திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை செல்வதால் தம்மனம்பட்டி-, கொன்னாம்பட்டி இடையே மெயின் ரோடை கடக்கும் போது விபத்தில் ஏராளமானோர் சிக்குகின்றனர். விபத்துக்கள் நடக்காமல் டூவீலர்கள், ஆட்டோ, கார் போனால் போதுமானது. அதேபோல் நாகம்பட்டி ஊராட்சி பகுதி முழுவதும் குடிநீர் உவர்ப்பு நீராக மாறிவிட்டது. எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
சர்வீஸ் ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்
எஸ்.தங்கவேல், முன்னாள் ஊராட்சி தலைவர், நாகம்பட்டி ஊராட்சி: வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் மேம்பாலம் அருகிலிருந்து வடக்கு நோக்கி செல்லக்கூடிய தம்மனம்பட்டி கொன்னாம்பட்டிக்கான சர்வீஸ் ரோடு இதுவரை போடப்படவில்லை. அதேபோல் தம்மனம்பட்டி கொன்னாம்பட்டி பிரிவு ரோட்டில் மக்கள் நின்று செல்வதற்கான ஓபன் கட் இட வசதி இல்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தில் மக்கள் எளிய முறையில் ரோடை கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ரோட்டின் இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்.