ADDED : மே 06, 2024 12:49 AM
வீரர்களுக்கு அழைப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க நிறுவனர் ஞானகுரு அறிக்கை:ஆந்திரா மாநிலம் கடப்பாவில் ஜூனில் தென் மாநில ஜூனியர் ஹாக்கி போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழ்நாடு அணிக்கான வீரர்கள் தேர்வு சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மே 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நடக்கிறது. பங்கேற்க விரும்பும் திண்டுக்கல் மாவட்ட வீரர்கள் வயது சான்றிதழ், ஆதார், போட்டோவுடன் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் பதியலாம். விபரங்களுக்கு 94865 02235 ல் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
நீர்மோர் பந்தல் திறப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர தி.மு.க.,சார்பில் ரவுண்ட்ரோடு பகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. கவுன்சிலர் சித்திக் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ராஜப்பா முன்னிலை வகித்தார். பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் திறந்து வைத்தார். மேயர் இளமதி,மாநகர துணை செயலாளர் அழகர்சாமி,மாவட்ட துணை செயலாளர் நாகராஜ்,மாநகர பொருளாளர் சரவணன் பங்கேற்றனர். இதேபோல் சி.பி.ஐ.எம்.,திண்டுக்கல் நகர்குழு சார்பில் காரல் மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு பஸ்ஸ்டாண்ட்,ஐயன்குளம் உள்ளிட்ட 2 இடங்களில் நீர்,மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம்,நகர செயலாளர் அரபு முகமது,கவுன்சிலர்கள் கணேசன்,மாரியம்மாள்,நகர் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன் பங்கேற்றனர்.
பிச்சை சித்தர்குருபூஜை
கன்னிவாடி: கன்னிவாடி குஞ்சனனம்பட்டியில் பிரசித்திபெற்ற பிச்சை சித்தர் கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான நேற்று குருபூஜை விழா நடந்தது. முன்னதாக விரதமிருந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தீர்த்த பால் கலசத்துடன், யாகசாலை பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவாசக முற்றோதலுடன் குருபூஜை நடந்தது. மகேஸ்வர பூஜையை தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடந்தது. ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.
பழைய பொருட்களுக்கு தீ வைப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் மதுரை ரோடு தோமையார்புரம் பகுதியில் வீட்டிலிருந்து தேவையில்லாத மெத்தை,ஷோபா போன்ற பழைய பொருட்களை மக்கள் கொட்டி செல்கின்றனர். இங்கு நேற்று மர்ம நபர்கள் யாரோ தீ வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் தவித்தனர். தீ அப்படியே மெல்ல மெல்ல அங்கிருந்த காய்ந்த செடிகளில் பிடித்து அதிகளவில் எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.