ADDED : மே 13, 2024 05:54 AM

இலவச மருத்துவ முகாம்
நத்தம்:நத்தம் கரந்தமலை மலைப்பகுதியில் உள்ள பெரிய மலையூரில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.எஸ். செல்வக்குமார் தலைமை தாங்கி தொடங்கினார். பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா, மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம் முன்னிலை வகித்தனர். சிறுநீர் பரிசோதனை,கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி., பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய் மருத்துவம், கண்புரை போன்றவற்றிற்கு சிவகாசி மதி இருதய மையம் டாக்டர்கள் மகேந்திரசேகர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
மண்டலாபிஷேகம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பூஞ்சோலை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 48 நாட்கள் நிறைவை முன்னிட்டு மண்டலாபிஷேகம் நடந்தது. முன்னதாக, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மருந்தில்லா மருத்துவம் நிகழ்ச்சி
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப்பகுதியில் மருந்தில்லா மருத்துவம் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் மதுரை அப்போலோ மருத்துவமனை சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் சவுந்தரபாண்டியன், நோயின்றி வாழ முடியாத என்ற தலைப்பில் கல்லல் முத்துப்பட்டி ராசி வர்மாலயம் மருத்துவர் ராஜாரீகா, உடல் உள்ளம் உயர்நலம் குறித்து கருங்காலி சித்தர் ஆகியோர் பேசினர். வெண்ணிலா கபடி குழு நிறுவனர் நல்லசாமி, திரைப்பட இயக்குனர் சுசீந்திரன், தமிழ் வேந்தன் பங்கேற்றனர்.
விசாகத் திருவிழா மே16ல் துவக்கம்
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம் மே 16 காலை 9:00 மணிக்கு நடக்கிறது. மாலை சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும். விழா நாட்களில் தங்க பல்லாக்கு, தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 6ம் நாள் திருவிழாவில் மே 21ல் மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. வைகாசி விசாகத்தன்று மே 22 ல் திருதேரோட்டம் நடக்கும். 10ம் நாள் மே 25 இரவு கொடி இறக்குதல் நடைபெற்று உற்ஸவம் நிறைவு பெறும்.
வருடாபிஷேகம்
வத்தலக்குண்டு : கிருஷ்ணாபுரம் அங்காள ஈஸ்வரி அம்மன் வாலகுருநாத லிங்கேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 13 அபிஷேகங்கள் நடந்தது. 13 கும்பங்கள் அமைத்து சிறப்பு யாகம் நடந்தது. அங்காள ஈஸ்வரி அம்மன், சோனை கருப்பு, நாகேஸ்வரி அம்மனுக்கும் அபிஷேகங்கள் நடந்தது. தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தங்கமுத்து குருக்கள் வருடாபிஷேகத்தை நடத்தினார்.