/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆத்துமேட்டில் இல்லை சிக்னல்; தொடர்கிறது விபத்து
/
ஆத்துமேட்டில் இல்லை சிக்னல்; தொடர்கிறது விபத்து
ADDED : செப் 05, 2024 05:04 AM

வேடசந்துார் : வேடசந்துார் ஆத்து மேட்டில், மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால் இங்குள்ள சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர போலீசார் முன் வர வேண்டும்.
வேடசந்துார் தாலுகா , சட்டசபை தொகுதியின் தலைநகராக உள்ள வேடசந்துார் நகர் பகுதியை குடகனாறு இரண்டாகப் பிரிக்கிறது. திண்டுக்கல், கரூர், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு மெயின் ரோடு பிரிந்து செல்கிறது. ஆத்து மேட்டில் நான்கு வழித்தடங்களும் சந்திப்பதால் இங்கு போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.
வாகன போக்குவரத்தும் கூடுதலாக உள்ளதால் வாகனங்களை முறையாக நின்று செல்லும் வகையில் சிக்னல் அமைக்கப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள சிக்னலை அடையாளம் தெரியாத வாகனம் சேதப்படுத்தி சென்ற நிலையில் சிக்னலின் செயல்பாடு தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கு போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. இதோடு விபத்துகளும் தொடர்கதையாக உள்ளது. வளர்ந்து வரும் நகர் பகுதியில் போக்குவரத்து சிக்னலை முறைப்படுத்தி அதை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காலை ,மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விளக்குகளும் எரிவதில்லை
பி.சுகுமார், அனைத்து வர்த்தக சங்கத் தலைவர், வேடசந்துார்: ஆத்து மேடு பஸ் ஸ்டாண்ட் இடையில் உள்ள இரட்டைப் பாலத்தில் விளக்குகள் முறையாக எரிவதில்லை. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து போதிய வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும். பாலத்தின் கிழக்குப் பகுதியில் ஹை மாஸ் லைட் பொருத்த வேண்டும். ஆத்து மேடு சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தேவை ரவுண்டானா
ஆர்.செல்வன், விவசாயிகள் சங்க பொருளாளர்: ஆத்து மேடு நால் ரோட்டில் அடிக்கடி விபத்துகள் தொடர்கின்றன. இங்கு போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் சிறிய அளவிலான ரவுண்டானா ஏற்படுத்தி வாகனங்கள் சுற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு சமூக ஆர்வலர்கள், தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். சிக்னல் செயல்பாட்டிற்கு வந்தாலும் விபத்துக்கள் குறையும்.
கவனம் செலுத்துங்க
ஆர்.எம்.நடராஜன், சமூக ஆர்வலர் : போக்குவரத்து போலீசாருக்கு என தனி ஸ்டேஷன் உள்ளது. ஆனால் இவர்கள் காலை , மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, ஆத்துமேடு பகுதிகளில் தங்களது பணியை கவனிப்பதில்லை. வடமதுரை ரோடு, ஒட்டன்சத்திரம் ரோட்டில் நின்று வாகன தணிக்கை பெயரில் மக்களை சிரம படுத்துகின்றனர். விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்க போக்குவரத்து போலீசார் தங்களது பணியில் கவனம் செலுத்த வேண்டும்.