ADDED : மே 01, 2024 07:24 AM

திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியால் திண்டுக்கல் நகரில் பயன்பாடில்லாத பூங்காக்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடக்கிறது.
திண்டுக்கல் நகரில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 24 பூங்காக்கள் உள்ளன. இவைகளில் பல பூங்காக்களில் செடிகள் வளர்ந்து,விஷ பூச்சிகள் நடமாட்டம்,சேதமான உபகரணங்கள் ,புதியாக கட்டி திறக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள முதியோர் , குழந்தைகள் மாலை நேரங்களில் பொழுது போக்கிற்கு வழியின்றி வீடுகளிலேயே முடங்கினர்.
தற்போது பள்ளி சிறார்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் அவர்களும் தவிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன்,உதவி செயற்பொறியாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்.எம்.காலனி,மரியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயன்பாடில்லாமல் கிடந்த பூங்காக்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கிருக்கும் குப்பை,செடிகளை அகற்றினர். பூங்காக்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் பயன்பாடில்லாத பூங்காக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.