/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீமை கருவேல காடாக மாறிய பிலாத்து உப்புக்குளம்
/
சீமை கருவேல காடாக மாறிய பிலாத்து உப்புக்குளம்
ADDED : ஆக 17, 2024 01:50 AM

வடமதுரை: சீமை கருவேல காடாக பிலாத்து உப்புக்குளம் மாறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
பிலாத்து வாலிசெட்டிபட்டி அருகில் 76 ஏக்கரில் உள்ளது உப்புக்குளம். இக்குளத்திற்கான நீர் வரத்து கருங்கல்பட்டி மாங்கோம்பை மலைப்பகுதியில் பெய்யும் மழை நீராகும். கருங்கல்பட்டி பகுதியில் உருவாகும் சிற்றோடை சீத்தப்பட்டி, ஸ்ரீராமபுரம், கொம்பேறிபட்டி, கம்பிளியம்பட்டி மேற்கு களம் வழியே பயணித்து உப்புக்குளத்தை அடைகிறது. போடிமான் கரடு பகுதியில் பெய்யும் மழை நீர் மற்றொரு சிற்றோடையாக உருண்டோடி ஸ்ரீராமபுரத்தில் இணைந்து ஆறாக மாறுவதால் பெரியாறு என இப்பகுதியினர் பெயர் வைத்துள்ளனர். இக்குளத்தை சார்ந்து 150 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் நிலங்கள் உள்ளன. இதன் மறுகால் நீர் தென்னம்பட்டி மந்தை குளத்திற்கு சென்றடையும். ஆனால் நீர்வரத்து ஓடைக்கரையில் இருக்கும் மண் பெரும் அளவில் அள்ளி செல்லப்படுவதால் மழை நீர் வரும் போது ஓடை உடைந்து குளத்திற்கு வர வேண்டிய நீர் வேறு திசைக்கு செல்லும் நிலை உள்ளது. குளத்தின் நீர்பிடிப்பு பகுதி முழுவதும் சீமை கருவேல மரங்களாக மண்டி கிடப்பதால் சேகரமாகும் சொற்ப நீரும் மரங்களால் விரைவாக உறிஞ்சப்படும் நிலை இருப்பதால் விவசாயிகள் ஏமாற்றம் பாதிக்கின்றனர்.
-கரையை பலப்படுத்துங்க
கே.நாகராஜன், பா.ஜ., வடமதுரை கிழக்கு ஒன்றிய தலைவர், பிலாத்து: குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சீமைகருவேல மரங்களால் நீர் பெருமளவில் ஊறிஞ்சப்படும் நிலை உள்ளது. வரத்து கால்வாயில் சில இடங்களில் மண் எடுக்கப்பட்டதால் கரை பலமிழந்து கிடக்கிறது. கன மழை பெய்து ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தால் கரை உடைந்து நீர் முழுவதும் வேறு பகுதிக்கு திரும்பிவிடும்.
பெருமளவில் நீர் வெளியேறும்-
கே.குமரேசன், விவசாயி, பிலாத்து: குளத்தில் மறுகால் நீர் வெளியேறும் கட்டமைப்பை முறைப்படி கட்டுமானமாக மாற்றியமைக்காமல் கற்களை மட்டும் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் குளம் பெருகினால் பெருமளவில் நீர் வீணாகி வெளியேறும் நிலை உள்ளது. இதை கருதி மறுகால் கட்டமைப்பை சீரமைக்க வேண்டும். குளத்திற்குள் இருக்கும் கருவேல மரங்களை அகற்றுவதுடன் நீர் வரத்து வாய்க்கால் கரையை பலமாக்க வேண்டும்.
-மேம்படுத்த நடவடிக்கை
வி.பத்மாவேல்முருகன், ஊராட்சி தலைவர், பிலாத்து: பிலாத்து உப்புக்குளம் ஒருமுறை நிரம்பினால் சுற்றிலும் பல நுாறு ஏக்கர் பகுதியில் இருக்கும் கிணறு , ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீர் வளம் கிடைக்கும். ஒன்றிய அலுவலர்களின் அனுமதி பெற்று மகாத்மாகாந்தி ஊரக வேலை திட்டத்தில் இக்குளத்திற்கான மேம்பாட்டு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.