
திருமண ஏக்கத்தில் தற்கொலை
எரியோடு: கோவிலுார் புளியம்பட்டி அடுத்த வடுகம்பாடி குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 43. ராமநாதபுரத்தில் ரத்த பரிசோதனை மையம் ஒன்றில் பணிபுரிந்தார். வயதாகியும் திருமணம் நடக்காத வருத்தத்தில் செல்வராஜ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எரியோடு எஸ்.ஐ., ஆரோக்கிய ரோஜர் மில்டன் விசாரிக்கிறார்.
மிரட்டியவர் கைது
எரியோடு: கோயம்புத்துார் சிங்காநல்லுாரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் 42. தனது அக்கா வளர்மதியை பார்க்க எரியோடு முத்தா நாயக்கன் புதுாருக்கு காரில் வந்தார். வளர்மதி, பக்கத்து தோட்டத்தை சேர்ந்த பெருமாள்சாமி இடையே நில அளவீடு பிரச்னையில் தகராறு உள்ளது. வழக்கறிஞரின் காரை சிலர் வழிமறித்து தகராறு செய்து மிரட்டினர். இதில் பெருமாள்சாமியை 64, கைது செய்த எரியோடு போலீசார் மேலும் சிலரை தேடுகின்றனர்.
பெண் கொலையில் இருவர் கைது
வடமதுரை: தென்னம்பட்டி எரியோடு ரோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பைரவன் 32 , மனைவி பார்வதி 28. இத்தம்பதி எலப்பார்பட்டி சந்திரன் இடத்தில் வாடகைக்கு தங்கினர். தொழில் போட்டியில் எலப்பார்பட்டியை சேர்ந்த கனகராஜ் 38, அவரது டிரைவரான அழகர்சாமி 19, ஆகியோர் சந்திரனின் நீர் விற்பனையகத்தை சேதம் செய்தனர்.
இது குறித்து பார்வதி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். ஆத்திரமடைந்த இருவரும் பார்வதியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இருவரையும் வடமதுரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
வடமதுரை : தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி, போலீசார் ரோந்து சென்றனர். அய்யலுார் வடுகபட்டி முத்து 60, 250 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். முத்துவை கைது செய்த போலீசார் அவரது டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
இறப்பில் சந்தேகம்
வடமதுரை: களத்துப்பட்டி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமையா 46. வடமதுரை சீலப்பாடியன்களம் கார்த்திக் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு இறந்து கிடந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறப்பு எதனால் என உரிமையாளர் தரப்பினர் பதில் தரவில்லை எனவும், சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் வடமதுரை போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.
மாடு முட்டி சிறுவன் காயம்
திண்டுக்கல் : ஆர்.எம்.காலனி மேற்கு அசோக்நகர் பகுதியை சேர்ந்த பிரபா 10 வயது மகன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அவ்வழியில் வந்த பசுமாடு சிறுவனை முட்டியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெண் சிசு மீட்பு
ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் -திண்டுக்கல் ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் பின்புறத்தில் பிறந்து சில மணி நேரங்களான பெண் குழந்தை இறந்து கிடந்தது. ரெட்டியார்சத்திரம் போலீசார் உடலை மீட்டனர். போலீசார் கூறுகையில், '7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை புதரில் கிடந்தது. வீசிச் சென்ற நபர்கள் குறித்த விசாரணை நடக்கிறது. என்றனர்.
தற்கொலை
திண்டுக்கல்: மறவப்பட்டியை சேர்ந்தவர் குழந்தைராஜ்62. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
குற்றவாளிகள் குறித்து போஸ்டர்
வேடசந்துார்: தஞ்சாவூர் பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் 2019 ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா 34, அப்துல் மஜீத் 37, புர்கானுதீன் 28, சாகுல் ஹமீது 27, நபீல் ஹாசன் 28, என்பவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து மாவட்ட வாரியாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
வேடசந்துார் முக்கிய பகுதிகளிலும் ஒட்டி உள்ளனர். தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒருவருக்கு ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.