ADDED : ஆக 05, 2024 07:00 AM
விபத்தில் காயம்
நத்தம்: வேடசந்துாரை சேர்ந்தவர்கள் சின்னம்மாள் 70, சிலும்பாயியம்மாள் 65. இவர்கள் இருவரும் பூ வியாபாரம் செய்கின்றனர். நேற்று முன்தினம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டி பிரிவு எதிரே உள்ள வீரசின்னம்மாள் கோயிலுக்கு பூ வியாபாரம் செய்ய பஸ்சில் இருவரும் வந்தனர். அப்போது ரோடை கடக்க முயன்ற போது இருவர் மீதும் திண்டுக்கல்லில் இருந்து வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியது. இருவரும் காயமானர். இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.
மது விற்றவர் கைது
நத்தம்: -நத்தம் பொய்யாம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பதாக நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி,எஸ்.ஐ.,விஜயபாண்டியன் உள்ளிட்டோருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொய்யாம்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு குமார் 39,என்பவர் மது விற்றார். போலீசார் அவரை கைது செய்து,அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தகராறு மூவர் கைது
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் 45. இவர் வீட்டிற்கு அருகிலிருந்த காலி இடத்தில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து 25, கண்ணன் 24, தேனி கெங்குவார்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் 27 ஆகிய மூவரும் மது அருந்தினர். அங்கு வந்த செந்தில்குமார், இங்கு மது அருந்தக்கூடாது என கூறியதால் ஆத்திரம் அடைந்தவர்கள் செந்தில்குமாரை தாக்கினர். தடுக்க வந்த சின்னன் 44 என்பவரையும் தாக்கியதில் இருவரும் காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பட்டிவீரன்பட்டி போலீசார் காளிமுத்து, கண்ணன், புவனேஸ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ரயில்மோதி மயில் பலி
திண்டுக்கல்: திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல் வந்தது. இதன் இன்ஜீனில் பெண் மயில் ஒன்று சிக்கி அடிபட்டு இறந்தது. ரயில்வே போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
காட்டு மாடு பலி
கன்னிவாடி: ஆடலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் 46. வேலைக்காக அருகே உள்ள கீழ்க்காடு பகுதிக்கு சென்றபோது அவரை காட்டு மாடு தாக்கியது. பின் காட்டுமாடு தன் கால் தவறி, க அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் விழுந்து இறந்தது. முருகன் காயங்களுடன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கன்னிவாடி வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
தகராறு மூவர் மீது வழக்கு
குஜிலியம்பாறை : லந்தகோட்டை ஊராட்சி கரும்புளி பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி பூங்கொடி 34. இவரது தோட்டத்தில் உள்ள பொது கிணற்றுப் பகுதியில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் வேப்ப முத்துக்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சித்தி லட்சுமி,மகளான ராஜேஸ்வரி,ஜெயந்தி ஆகியோர் சேர்ந்து பூங்கொடியை தாக்கினார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., விஜயலிங்கம், லட்சுமி, ராஜேஸ்வரி, ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.